
எமது தேச விடுதலைக்காக தம்மையே ஈந்த கரும்புலிகளின் உறுதியினை நெஞ்சில் ஏந்துவோம்!
கரும்புலிகள் எமது தமிழீழ தேசத்தின் விடுதலைக் கனவினை ஏந்திச் சென்ற பெருமை மிக்கவர்களாய் இருக்கிறார்கள். தமது இளமைக் கால கனவையெல்லாம் தாயக விடுதலைக்காக தியாகம் செய்திட்ட வீர மறவர்கள் கரும்புலிகள். 1987 வடமராட்சி பகுதியில் பாரிய விமான குண்டுவீச்சு எறிகணை தாக்குதலுடன் மக்களுக்கு பாரிய உயிரிழப்பையும் பல்லாயிரக்கணக்கானோருன் இடப்பெயர்விற்கு காரணமாகவிருந்த படை நகர்வை தடுத்து நிறுத்திய 1987ம் ஆண்டு நெல்லியடி தற்கொடைத் தாக்குதலில் கப்டன் மில்லர் செய்திட்ட ஈகமானது எமது விடுதலைப் போராட்டத்திற்கு புதியதொரு உத்வேகத்தினையும், உறுதியினையும் அளித்தது.
ஜூலை 5ம் நாள் கரும்புலிகள் நாளை அனுசரிக்கிற நாங்கள், கரும்புலிகளாக வாழ்ந்தவரிடத்திலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. கரும்புலிகளுக்கு அகவணக்கத்தினை நாம் செலுத்திடும் போதெல்லாம் நாம் நெஞ்சில் ஏற்றிக் கொள்ள வேண்டியது கரும்புலிகளின் மன உறுதியினைத் தான்.
ஒரு நாள் எமது தேசம் விடுதலை அடைந்தே தீரும் என்ற உறுதி அவர்களிடத்தே இருந்தது. எமது ஈகம் எம் மக்களின் துயரை ஒரு நாள் துடைத்தே தீரும் என்ற பெரும் லட்சியம் அவர்களிடத்தே இருந்தது. இன்று எம் இளையோர் அந்த வீர நாயகர்களின் லட்சியக் கனவினை ஏந்திச் செல்ல வேண்டும்.
எமது கரும்புலிகள் ஈகம் செய்து காத்த எம் தேசம் இன்று சிங்களப் பேரினவாத அரசினால் ஆக்கிரமிப்பிற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இன்று எமக்கு நிகழ்ந்த இன அழிப்பிற்கு நீதி கேட்டு போராடிக் கொண்டிருக்கிற நாம், எமது தேசத்தின் விடுதலையே முதன்மையான நோக்கம் என்பதனை மறந்துவிடக் கூடாது. எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் எமது விடுதலைக் கோரிக்கையினை நாங்கள் கைவிட்டு விடக் கூடாது என்பதனை கரும்புலிகளின் உறுதி நமக்கு சொல்லிக் கொண்டிருக்கிறது.
எமது மக்களுக்கு ஆதரவாக இந்த உலகத்தில் எந்த சக்தியும் இல்லாதிருந்த போதும், தனித்து நிலையான பெரும் சக்தியினை விடுதலைப் போராட்டத்திற்கு உருவாக்கிக் கொடுத்தவர்கள் கரும்புலிகள். ஈழத் தமிழரில் கடைசி மனிதனாக ஒருவர் நிற்கும்போது கூட, விடுதலைக்கு போராடும் சக்தியினை கரும்புலிகளின் உறுதி அளிக்கிறது.
இன்று உலகத்தின் ஆகப் பெரும் சக்திகள் எமது விடுதலைக்கு எதிராக நிற்கின்றன. கரும்புலிகள் எதற்காக ஈகம் செய்தார்களோ, அந்த லட்சியக் கனவு நம் இளையோரிடத்திலே கையளிக்கப்டிருக்கின்றது. எமது விடுதலையின் நியாயத்தினை உலகம் முழுதும் கொண்டு சேர்க்க வேண்டிய பெரும் பணி எம் இளையோருக்கு இருக்கிறது.
தரையிலும், கடலிலும், வானிலும் என எல்லா வடிவங்களிலும், எல்லா இடங்களிலும் கரும்புலிகள் எதிரிகளை வீழ்த்தினார்கள். இன்று சிங்கள அரசு உலகின் மத்தியில் இன அழிப்பினை மறைப்பதற்கான வேலைகளை செய்து கொண்டிருக்கிறது. அதனை முறியடித்து, எமது மக்களுக்கு நிகழ்ந்ததை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டும் பொறுப்பு எமது மக்களுக்கு உள்ளது. எமது விடுதலை நியாயத்தினை உரக்கச் சொல்லிட எமது இளையோர் எல்லா வழிகளிலும் உழைத்திட உறுதி பூண்டிட வேண்டும். போராட்ட வடிவம் மாறலாம், ஆனால் லட்சியம் ஒரு போதும் மாறப் போவதில்லை என்ற உறுதியினை மீண்டும் மீண்டும் நமக்குள் அசைபோட்டுக் கொள்ள வேண்டும்.
வரலாற்றில் அனைத்து விடுதலைப் போராட்ட இயக்கங்களும் பின்னடைவைச் சந்தித்திருக்கின்றன. ஆனால் பின்னடைவுகள் ஒருபோதும் நிரந்தரமானவை அல்ல. எந்த பின்னடைவுகளிலிருந்தும் மீண்டெழும் ஆன்ம பலத்தினை கரும்புலிகளின் ஈகம் எமக்கு அளிக்கிறது.
எமது விடுதலைப் போராட்டம் அழிக்கப்படவில்லை. அழிக்கவும் முடியாதது. எமது தேச விடுதலையினை மீட்டெடுக்க உலகம் முழுதும் எம் தமிழ் இளையோர் கூட்டம் புத்தெழுச்சியுடன் திரளட்டும். விடுதலைக்கான புதிய வேள்வி துவக்கப்படட்டும். உலகத்தின் மனசாட்சியினை தட்டி எழுப்புவோம். நாம் வலிமை கொண்ட இனமாய் மீண்டெழுந்து நிற்போம். புதிய புதிய போராட்ட, பரப்புரை வழிமுறைகளை கையிலெடுப்போம். ஒருவருக்கொருவர் தோள் கொடுத்து நிற்போம். எம் தேசத்தில்தான் எமது வாழ்க்கை என்பதை கரும்புலிகளை நெஞ்சில் ஏந்தி உறுதி பூணுவோம்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
சுவிஸ் தமிழர் அரசியல் துறை.
0313814058, 0788728886, 0788897858
0313814058, 0788728886, 0788897858