அடர்ந்த காட்டுப்பகுதியில் இரகசியமாக இயங்கி வந்த நிலையம்!
குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியங்குளம் காட்டுப் பகுதியில் இரகசியமான முறையில் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை இடம்பெற்ற இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையில் கசிப்பு காய்ச்சுவதற்கு பயன்படுத்தும் கசாலம் பரல்கள் கைப்பற்றப்பட்டதுடன், இருவர் தப்பிச் சென்றுள்ளதாக திருகோணமலை பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையிலேயே இந்த சற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன்போது, கசிப்பு காய்ச்சிய இருவர் அருகிலிருந்த ஆற்றில் பாய்ந்து தப்பிச் சென்றுள்ளனர்.
அடர்ந்த காட்டுப் பகுதியில் கசிப்பு காய்ச்சுவதற்காக பயன்படுத்தப்படும் கசாலம் 53,600 மில்லி லீற்றர் மூன்று பரல்களும், கசிப்பு 22,500 மில்லி லீற்றர் கொண்ட பரலும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டதாக திருகோணமலை பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி எஸ்.ஐ.ஜனோசன் தெரிவித்தார்.
கைப்பற்றப்பட்ட பொருட்களை குச்சவெளி பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் இன்று குறித்த பொருட்களை ஒப்படைக்க உள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.