
வெள்ள நீரை உறிஞ்சி எடுக்கும் எனது ஊரின் குருத்து மணலே எங்கு போனாய்?
(Basheer Segu Dawood) வெள்ள நீர் வடிந்தோட இயற்கை தந்த வரமான “வாண” என்கிற ஓடைகளை நிரப்பினோம். காணிகளாகச் சமைத்தெடுத்த ஓடைகளுக்கு கள்ள உறுதிகளை எழுதி தனியுடமையாக்கினோம். பின்னர் அதன் மீது கட்டடங்களை எழுப்பினோம்.
நெடிதுயர்ந்தும், பரந்தும் வளர்ந்து எமதூரைக் காத்து வளப்படுத்திய மரங்களை வெட்டி வீழ்த்தினோம். அவற்றை விற்றுக் காசாக்கினோம்.மரங்களிருந்த இடத்தில் மரங்களை விற்ற பணத்தையும், வங்கியில் வட்டிக்கு எடுத்த கடன் காசையும், உழைத்து சேகரித்த பணத்தையும் ஒன்றாகக் கலந்து கட்டடம் எழுப்பினோம்.
அந்த ஊரைப் போல என்னுடைய ஊரும் அபிவிருத்தியடைய வேண்டும் என்று போட்டிக்கு நின்றோம். பூமியைக் கட்டடங்களால் நிரப்பினோம். வீதிகளை கொங்க்றீட்டால் மெழுகினோம். குருத்து மணலால் அழகு படுத்தப்பட்டிருந்த வீட்டு முற்றத்தையும் கற்களாலும்,சீமெந்தாலும் போர்த்தினோம்.பெண் பார்க்க வந்த மாப்பிள்ளையும் அவரது வீட்டாரும் பெண்ணை விடவும் அதிகமாக வீட்டை நோட்டமிட்டனர்.
மனிதர்கள் வாழும் பூமியில் மனிதர்களை விடவும் ஆலைகளைப் பெறுமதி மிக்கதாக ஆக்கினோம். இதனால் சுவாசிக்கும் காற்றை நஞ்சாக்கி ஆயுள் குறைந்த பரம்பரையை பெற்றெடுத்தோம். அபிவிருத்தி என்ற பெயரில் நிலத்தடி நீரை மாசுபடுத்தினோம். ஓசோன் படலத்தில் ஓட்டை போட வேலையாட்களாகப் பணியாற்றினோம்.
பிரபஞ்ச அதிகாரத்தின் யாப்பை மீறினோம். பின்னர் கொஞ்சக் காலத்தில் அதனைக் கிழித்தெறிந்தோம். அந்த இனத்தவரது ஊர் போல எனதூர் இல்லையே என்று பொறாமைப்பட்டுக் குரோதம் வளர்த்தோம்.மனிதரை மனிதர் சுட்டும்- வெட்டியும் கொன்றோம். அபிவிருத்திக் கனவிலும்,பெருமிதத்திலும் குற்றவாளிகளாக மிதக்கிறோம்,நானும் நீங்களுமான நாம்.
அப்படி என்றால் நமக்கு அபிவிருத்தி தேவையில்லையா என்ற முக்கியமான கேள்வியை நண்பர்கள் கேட்பது புரிகிறது.
புரிகிறது, அபிவிருத்தித் திட்டங்கள் விஞ்ஞான பூர்வமாகத் திட்டமிட்டுச் செய்யப்படல் வேண்டும், அவை அடுத்த தேர்தலில் வெல்வதற்காகத் தமது ஆதரவாளர்களின் முறைகேடான விருப்பத்தை நிறைவேற்றுவதாக இருக்கக் கூடாது.
காட்சிகளை கண்களால் பார்ப்பதற்கும் ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு மனதால் பார்ப்பதற்கும் இடையில் உள்ள வேறுபாடே அஞ்ஞானத்துக்கும் விஞ்ஞானத்துக்கும் இடையிலான வேறுபாடாகும்.
மெய்ஞானம் என்பது அவரவர் தனித்தனியாகப் புரிந்து கொள்வதாகும். அரசியல் மெய்ஞானமும் நன்மைக்கோ- தீமைக்கோ தனியே தமக்குள் பிரவகிப்பதாகும்.
ஊரில் வெள்ளமாம். இயற்கை, மழையை வருடா வருடம் பல தடவைகள் கூட்டியும் குறைத்தும் பொழிய வைக்கிறது. இயற்கை மாறவில்லை, மனிதர்கள் இயற்கைக்கு விரோதிகளாக மாறிவிட்டோம்.. இதனால்தான் நமது உள்ளூர் அரசியல் தலைவர்களான நாம், ஊருக்கு உதவாது எனத் தெரிந்தும் மண் வெட்டிகளோடு அடுத்தவன் வளவுக்குள் வெள்ளத் தண்ணீரை வெட்டி அனுப்புவதற்காக அலைகிறோம். இவ்வாறே பாதிக்கப்பட்டவர்களுக்கு சோத்துப் பொதிகளைச் சேகரிப்பதற்காக சிவில் சமூகமான நாம் மடித்துக் கட்டியபடி அலைகிறோம்.
கிராமத்துத் தோட்டத்தில் காய்த்த "நாடங்காய்" சந்தைக்கு கொண்டு செல்லும் முன்னர் முத்திவிடும் என்ற பயத்தில் அதன் களுத்தில் தோட்டக்காரன் கத்தியால் கீறிவிடுவான். இந்த நாடங்காய் போல்தான் இன்றைய அரசியலில் நான்!