
மைத்திரி தானாகவே பதவி விலகுவார், அம்பலப்படுத்திய அவரின் நெருங்கிய நண்பன்
நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி சர்வாதிகார ஆட்சி நடத்தும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெட்கப்பட்டு, அவமானப்பட்டு தலைகுனிய வேண்டும் என முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
நாட்டில் இன்று பிரதமரும் இல்லை, அமைச்சரவையும் இல்லை. எனவே, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலத்தைக் கொண்ட ஐக்கிய தேசிய முன்னணியே மீண்டும் ஆட்சியமைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
எனினும், ஜனாதிபதி இதற்கு தடையாக இருக்கின்றார். எனவே, அவர் பதவியிலிருந்து விலக வேண்டும் அல்லது ஆட்சியை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
அலரி மாளிகையில் வைத்து இன்று ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில்,
அமைச்சுக்களின் செயலாளர்களை அழைத்து பேசவோ அல்லது அவர்களுக்கு ஆணையிடவோ ஜனாதிபதிக்கு இப்போது அதிகாரம் இல்லை. நீதிமன்ற உத்தரவை அவர் மதிக்க வேண்டும்.
நாங்கள் ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்க வேண்டும் என தொடர்ந்து அழுத்தம் வழங்கினால், தான் பதவி விலக வேண்டிய நிலை வருமென ஜனாதிபதி எங்களிடம் சொன்னார்.
அது அவரின் இஷ்டம். பதவி விலக வேண்டுமெனில் அவர் உடன் பதவி விலகட்டும். அந்த நிலைமையை அவரே உருவாக்கி விட்டார்.
ஜனாதிபதியின் சர்வாதிகார ஆட்சியால் நாடு இன்று மோசமான நிலையை அடைந்துள்ளது. இந்த நிலையில், அரசை எப்படி எடுப்பது என்பது எங்களுக்குத் தெரியும்.
எங்களை அந்த நிலைக்கு தள்ளாமல் ஆட்சியை எங்களிடம் ஜனாதிபதி ஒப்படைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன 2015இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து ஜனாதிபதி மைத்திரியுடன் நெருங்கிய நண்பராக செயற்பட்டு வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.