
அழிப்பது அல்ல... காப்பதே வீரம் - அன்பின் வழியை போதித்த புத்தர் அவதரித்த தினம் இன்று!
மகத நாட்டின் தலைநகரான பாடலிபுத்திரத்துக்கு அருகில் காணப்பட்ட அடர்ந்த வனம் அது. அங்கு, திருடன் ஒருவன் வசித்துவந்தான். அந்த வனத்தைக் கடப்பவர்களின் உடைமைகளைக் கொள்ளையடித்து கொலை செய்வதையே தொழிலாகக் கொண்டவன் அவன். அதனால், அந்த வனத்துக்குள் நுழையவே மக்கள் அஞ்சி, நடுங்கிக்கொண்டிருந்தார்கள்.
அப்போது, கையில் திருவோடு, கிழிந்த துணி, மெலிந்த தேகம், ஊன்றி நடக்கச் சிறு கோல் ஆகியவற்றை உடைமைகளாகக் கொண்டு, அந்த வனத்துக்குள் நுழைந்தார் துறவி ஒருவர்.
`இந்த வனத்துக்குள் வசிக்கும் திருடன் பொல்லாதவன். ஆயிரம் பேரைக் கொல்வேன் என்று வெஞ்சினம் உரைத்துக் கொலை செய்வதையே தொழிலாகக் கொண்டிருக்கிறான். 999 பேரைக் கொன்று அவர்களின் கட்டைவிரல்களை அறுத்து மாலையாக அணிந்து தனது 1000 - வது இரைக்காகக் காத்திருக்கிறான். தயவு செய்து அங்குப் போகாதீர்கள்” என்று துறவியிடம் வேண்டினர் மக்கள்.
துறவி, சிறிதுநேரம் அமைதியாக நின்றுகொண்டிருந்தார். பிறகு, ``அவன் எனக்காகத்தான் காத்திருக்கிறான். அவன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஆயிரமாவது இரை நான்தான்” என்று கூறிவிட்டு, விறுவிறுவென்று வனத்துக்குள் சென்றார்.
யாரும் வரத் தயங்கும் அந்தக் காட்டு வழியில் வரும் மனிதனைக் கண்டதும் மகிழ்வடைந்தான் அந்தத் திருடன். ஆனால் அடுத்த கணம், வந்தவரின் முக தீட்சண்யத்தைக் கண்டதும் சற்று மனம் தடுமாறினான். களங்கமற்ற முழுமதியைப் போன்ற அந்த முகத்தைக் கண்டதும் கல்லிலிருந்து நீர் சுரப்பதுபோல ஈரமற்ற அவன் மனதிலும் இரக்கம் பிறந்தது. அவன் துறவியை நோக்கி,``ஐயா, தங்களைக்கண்டால் சாதுவாகத் தெரிகிறது. உயிர்ப் பிச்சை அளிக்கிறேன். இங்கிருந்து ஓடிவிடுங்கள்” என்றான்.
துறவியோ புன்னகைத்தார்.
``என்னைக் கொல்லும் அளவுக்கு வலிமையிருந்தால் முயற்சி செய்து பார்” என்றார் துறவி.
இரக்கம் என்பதை அறியாத தானே இரக்கம் கொண்டும், இந்தத் துறவி இப்படி அகங்காரம் கொண்டு பேசுகிறாரே என்று வெகுண்டான்.
``என்னால் முடியாதது எதுவும் கிடையாது. உன்னை என்ன செய்கிறேன் பார்” என்று கோபத்துடன் தனது ஆயுதத்தை உயர்த்தினான் அந்தக் கொடியவன். அப்போது துறவி, எதிரில் இருந்த மரத்தைச் சுட்டிக்காட்டி, ``உன்னால் எதையும் செய்ய முடியுமென்றால், என்னைக் கொல்வதற்கு முன்பு இந்த மரத்தில் இருக்கும் இலைகள் அனைத்தையும் பறி” என்றார்.
அவன் அவர் சொன்னதைச் செய்திருக்கவே வேண்டிய அவசியமில்லை. ஆனால், அவன் கட்டளைக்குக் கீழ்ப்படியும் ஒரு வேலையாள்போல அதைச் செய்தான். அந்த மரத்தில் இருந்த இலைகளை எல்லாம் பறித்துப் போட்டான். செயற்கரிய செயலைச் செய்தது போன்ற பெருமிதத்துடன், `பார்த்தீர்களா, என் பராக்கிரமத்தை' என்பதைப்போலப் பார்த்தான்.
இப்போதும் புன்னகை மாறாத அந்தத் துறவி, ``நீ பறித்த இலைகளை மீண்டும் மரத்திலேயே ஒட்டவை” என்றார்.
அதுவரை அந்தக் கொடியவன் முகத்தில் இருந்த பெருமிதம் ஒரு கணத்தில் அழிந்தது. என்ன பதில் அளிப்பதென்று தெரியாமல் நிலை தடுமாறினான்.
இப்போது துறவி தலைகவிழ்ந்து நிற்கும் அவனைப் பார்த்து, ``உன்னால்தான் முடியாத செயல் என்று எதுவுமே கிடையாதே?” என்று கேட்டார்.
கொடியவன் அமைதியாக நின்றான்.
``நீ செய்யும் காரியங்களை யார் வேண்டுமானாலும் செய்துவிட முடியும். ஆனால், உயிர்களைக் காத்து அவர்களை நேசிக்க, ஒரு சிலரால் மட்டுமே முடியும். உயிர்களை அழிப்பது அல்ல வீரம்; காப்பதே வீரம்” என்று சொல்லிவிட்டு நடந்தார்.
இதைக் கேட்ட அந்தக் கொடியவன், அந்தத் துறவியின் பாதங்களில் சரணடைந்து, அவருக்கு அடியவரானான். அந்தக் கொடியவன் பெயர் அங்குலிமால். அவனை நல்வழிப்படுத்திய துறவி புத்தர்.

