
உடைந்தது காணாமல் போனோர் அமைப்பு! காங்கிரசின் அடுத்த இலக்கு மாணவர் அமைப்பா ?
தயாளன்
எல்லாஉத்திகளும் மாற்றப்பட்டு விட்டன, தமிழ் தேசிய உணர்வுடன் செயற்பட்ட இளைஞர்களை பயமுறுத்தல், கைது, சித்திரவதை, தடுப்பு என்ற நடைமுறையை 2009 பின்னர் தலைகீழாக மாற்றிவிட்டது சிங்களம். எது நடக்க இருக்கிறதோ அதற்குள் புகுந்து ஏற்கெனவே ஒரு செயற்திட்டத்துடன் செயலாற்றுபவர்களின் வேகம் போதாது என்று காட்டி தாங்கள் இன்னமும் தீவிரமானவர்கள்போல நடந்து எல்லாவற்றையும் சிதறடிப்பதே புதிய உத்தி. 1983 இல் பல்வேறு இயக்கங்களுக்கும் இந்தியா பயிற்சியும் , ஆயுதமும் வழங்கி ஒரு மித்த கருத்துடன் இளைஞர் சக்தியை செயற்படவிடாமல் தடுத்தது போன்ற உத்தியே இப்போது கையாளப்படுகின்றது .
உதாரணத்துக்கு புங்குடுதீவு மாணவி வித்தியா வன்புணர்வுக்குட்படுத்தி படுகொலை செய்யப்பட்டபின் தமிழ் மக்களிடையே குறிப்பாக இளைஞர் சக்தியிடம் ஏற்பட்ட கோப உணர்வை ஒரு ஒழுங்கமைக்கபட்ட வடிவத்தில் கட்டுப்பாட்டுடன் செய்யமுடியாமற்போன சம்பவத்தைக் குறிப்பிடலாம். இதில் எல்லோருமே தாங்களே முடிவெடுப்பவர்களாக இருந்தார்கள்.ஒரு தலைமை இல்லை. ஆக்ரோஷத்துடன் போனவர்களுள் பக்கத்தில் நிற்பவர்கள் யார் யாரென எவருக்கும் தெரியாது. முகத்தில் கைக்குட்டையை கட்டிக்கொண்டு நீதிமன்றத்தின் மீது முதல் கல்லை விட்டெறிந்தவனே மறுபக்கத்தில் நின்று தம்மை கைது செய்ததாக அந்தக் கலவரம் தொடர்பாகக் கைதுசெய்யப்பட்ட இளைஞர் ஒருவர் தெரிவித்ததாக தகவல் வெளியானது இது போன்ற அதிதீவிரவாத முகத்துடன் நின்று கொண்டு தமிழர்களை முடிவெடுக்க முடியாதவர்களாக உலகுக்கு காட்ட முயற்சிக்கிறது ஜீ .ஜீ பொன்னம்பலத்தினால் ஆரம்பிக்கபட்ட அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி.
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சகல தமிழ்க் கட்சிகளையும் கலந்துரையாடலுக்கு அழைப்பதற்கு முன்னரே லண்டனில் தேர்தலைப் புறக்கணிப்பதாக முடிவெடுத்தாயிற்று. இது பற்றி செய்திகள் பரவலாக வெளிவந்து விட்டன. அந்த முடிவை அறிவிப்பதற்காகத்தான் அதில பிழை; இதில சொத்தி என்று சொல்ல இவர்களுக்கு காரணம் தேவைப்பட்டது. மக்கள் வாக்களிப்பது தொடர்பாக முடிவெடுக்க வந்தவர்களில் ஒரு முக்கிய புள்ளி அப்புக்காத்து மணிவண்ணன். யாழ் மாநகரசபை முதல்வர் பதவிக்கு பெயரிடப்பட்ட இவருக்கு ஒரு வட்டாரத்தில் நின்று போட்டியிடமுடியவில்லை. போட்டியிட்டால் என்ன ஆகும் என்றபயம்.வாக்களிக்க விட்டால் மக்கள் என்ன செய்வார்கள் என்றும் தெரியும். மருமகளில் தினம் ஏதோ ஒரு குறைகண்டுபிடிக்கும் மாமிமார்கள் மாதிரி காரணம் ஒன்றைத் தேடுவதே இவர்களது முக்கிய பணி . பாராளுமன்றத்தில் பிரிவினையை எதிர்க்கிறோம் என்று சத்தியப்பிரமாணம் செய்த கஜேந்திரகுமாரும், கஜேந்திரனும் ஒற்றையாட்சியை எதிர்க்கிறோம்; ஒரு நாடு இருதேசம் என்று படம்காட்டுகிறார்கள். 50க்கு 50 என்ற கோரிக்கையை முன்வைத்த ஜீ.ஜீ பேரனல்லவா கஜேந்திரகுமார்.
இந்தக் கோரிக்கையை முன் வைத்த ஜீ.ஜீ 983304 பேர்கொண்ட மலையகத்தமிழரின் குடியுரிமையை நீக்கும் சட்டத்துக்கு எதிராக வாக்களிக்கவில்லை. அவரது அமைச்சர் பதவி தடுத்தது. மலையகத்தமிழரை விட இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தமிழரின் எண்ணிக்கை 1953 ஆண்டுக் கணக்கெடுப்பின் படி குறைவு( 908705) அன்று ஜீ.ஜீ இந்தத் துரோகத்துக்கு துணைபோகாமல் இருந்திருந்தால் இயற்கை அதிகரிப்பின் பிரகாரம் ஒட்டுமொத்த தமிழரின் எண்ணிக்கையை கணக்கிட்டுப் பாருங்கள்.
பிரபாகரன் தமிழ் எம் பிக்களைப் பாராளுமன்றத்துக்கு அனுப்பும் போது பிரிவினைக்கெதிராக சத்தியப்பிரமாணம் எடுக்க வேண்டிவருமென்று தெரியாமலா அனுப்பினார். அவர் சூழ்நிலைக்கு கேற்றவாறு முடிவெடுத்தார். இவர்கள் ஒற்றையாட்சியை எதிர்க்கிறோம்; பிரபாகரனைவிட நாங்கள் தீவிரமானவர்கள் என்று படங்காட்டி லண்டனில் எடுத்த முடிவை இங்கு செயல்படுத்த முனைகின்றனர்.
இவர்களால் குழப்பமுடியாமற்போன ஒரேயொரு விடயம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல். முரண்டு பிடித்துக்கொண்டிருந்த மாகாணசபையினரையும், பல்கலைக்கழக மாணவர்களையும் மிகச்சசிரமத்தின் மத்தியில் ஒருமுகப்படுத்தினர் முன்னாள் மூத்த போராளிகள் மூவர். எல்லாத் தகிடு தத்தங்களையும் இவர்கள் செய்து பார்த்தும் இதனைக் குழப்பமுடியவில்லை. இது தெரியாமல் இவர்களுக்கு நிதியை அள்ளி வீசும் புலம்பெயர் தரப்பு கிழக்கிலிருந்து மக்களைக்கொண்டுவந்து இவர்களுடன் இணைந்து தனியாக நினைவேந்தல் செய்ய அனுப்பியது.அந்தக் கைங்கரியம் கைகூடாமல் போகவே வாங்கிய காசுக்காக வடகிழக்கு பேதத்தை ஏற்படுத்த முனைந்தார் ஒருவர்.
"எழுக தமிழ்" நிகழ்வுடன் இவர்களுக்கு உடன்பாடுகாண முடியாமற்போயிற்று ஈ.பி. ஆர்.எல் .எப் வரக்கூடாது என்று சொன்னதாக தெரிகிறது. சுமார் நான்கு மணி நேரச் சந்திப்பில் கலந்து கொண்ட பல்கலைக்கழக மாணவர்கள் களைத்தேவிட்டனர். அது ஒரு புறமிருக்க மிகவும் கொச்சையான வார்த்தைப் பிரயோகங்களுடன் இந் நிகழ்வுக்கு எதிரான கருத்தைப் பதிவு செய்தனர் இவர்களின் முகநூல் போராளிகள். இவர்கள் என்னதான் செய்தாலும்இவர்கள் எதிர்பார்க்காத அளவில் மக்கள் திரண்டனர். ஏற்பட்டாளர்களின் எதிர்பார்ப்பை விட இது குறைவுதான். அதுவும் சகிக்கமுடியவில்லை இவர்களால். அடுத்தநாளே வவுனியாவிலிருந்து திலீபனின் நினைவுத்தூபி வரை ஊர்வலம் என்றொரு தகவல் வெளியானது. எப்படியோ திலீபனை நினைவு கூர்கிறார்களே எனப் பார்த்தால் அதிலும் குழறுபடி உள்ளுராட்சி சபைகள் நினைவேந்தல்களைப் பொறுப்பெடுப்பது சிக்கலானது என பொதுவாக அரசியல் கட்சிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. ஆள்காட்டிவெளி மற்றும் பண்டிவிரிச்சான் துயிலுமில்லங்கள் ஐ. தே.க வின் நிர்வாகத்தில் இருப்பது பற்றி சுட்டிக்காட்டப்பட்டது. ஆயினும் யாழ் மாநகரசபை இதனைப் பொறுப்பேற்று நடத்துவது என்று முடிவெடுத்தபோது இவர்கள் தரப்பு உறுப்பினர்களும் உடன்பட்டனர். அடுத்து தாங்கள் மாநகரசபையை கைப்பற்றினால் தாங்களே நடத்தலாம் என்பதே இவர்களின் அவா.
இந்த வருடம் எழுக தமிழின் தாக்கத்தால் திலீபனின் பெயரால் ஊர்வலம் நடத்தினர். உண்மையில் யாழ் மாநகரசபையின் ஏற்பாடுகளைச் சிதறடிப்பதே இவர்களின் நோக்கம். திலீபனின் படத்துக்கு முன்னால் யாரும் முரண்டுபிடிக்கமாட்டார்கள் என்பது இவர்களின் திட்டம். திலீபனின் உண்ணாவிரத மேடையிருந்த இடத்தில் நிகழ்ச்சிகள் பற்றி அறிவிப்பை வெளியிட்டனர். பின்னர் தூபியடியிலும் இதே நிகழ்ச்சி நிரல். முதலில் சுடரேற்றிய மாவீரரின் தாயை மீண்டும் அழைத்தனர் .
அடுத்து தங்களுக்கு பின்னர்தான் எவரும் என அறிவிக்கமுற்பட்டனர். வவுனியாவில் இருந்து வந்தவர்கள் முதலில் மலரஞ்சலி செய்யட்டும் என்று அறிவித்தனர். இவர்களுக்கு பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ யாழ் மாநகர சபையின்முதல்வர் ஆர்னோல்ட் தான். போது இடத்தில் எப்படி நடந்து கொள்வது என்ற குறைந்த படிச்ச மரியாதை கூட இந்த அப்புக்காத்துகளுக்கு தெரியவில்லை.
இங்கிலாந்து மகாராணி இலங்கைக்கு வந்தபோது முதலில் கைலாகு கொடுத்து வரவேற்றது நாட்டின் பிரதமரல்ல. கொழும்பு நகரமேயர் உருத்திராவே. நகரின் முதற்பிரஜை என்ற வகையில் பொதுவைபவங்களில் அந்தக் கௌரவத்தை வழங்கும் பண்பாடு உலகரீதியில் உண்டு. இதைக் கவனத்தில் எடுக்காமல் நினைவேந்தல் நிகழ்வுகளைக்கூட கட் சிசார்பாக மாற்றுகின்றனர் இவர்கள் .
எழுக தமிழுக்கு பலம் சேர்த்தவர்கள் காணாமல்போனோரின் குடும்பங்கள் என்ற ரீதியில் அவர்கள் மேல் கடுப்பு ஏற்பட்டது இக் கட்சியினருக்கு. இது தொடர்பானவிடயங்களை கையாளும் ஒருவரிடம் இக் கட்சியின் ஒரு முக்கிய பிரமுகர் இதனைத் தம்மிடம் கையளிக்குமாறு கேட்டுக்கொண்டதாக நம்பிக்கையான வடடாரங்கள்தெரிவித்தன .இவர்களின் வரலாறு தெரிந்த அவர் அதற்கு உடன்படாததால் காணாமல்போனோரின் உறவினர் அமைப்பையே இரண்டாக உடைத்து விட்டது இக் கட்சி. காரணங்கள் தேடிப்பிடித்தபோது இந்தக் கட்சிக்கா கஷ்டம்.அதைத்தருகிறோம் ; இதைத்தருகிறோம்;
கிளிநொச்சி கூட்டத்துக்கு வாருங்கள் என சம்பந்தப்பட்டவர்களுக்கு அழைப்பு.
தமக்கு உதவும் நிறுவனம் எது என்பதை இப்போதைக்கு மூடுமந்திரமாக பத்திரிகையாளர் மகாநாட்டில் காட்டிக்கொண்டார் அந்தத் திடீர்த் தலைவி. மொத்தத்தில் எதையும் உருப்படியாக நடக்கவிடாமாட்டார் ஜீ .ஜீ பொன்னம்பலத்தின் பேரன்.
தற்போது இவர்களின் கண்ணுக்கு முதல் எதிரியாகத் தெரிபவர் முன்னாள் முதல்வரே. ஒரு மரத்தை சாய்க்கவேண்டுமெனில் கிளைகள் ,பக்கவேர்களை முதலில் தறிக்கவேண்டுமென கருதினர். அதன் வெளிப்பாடே இந்த அமைப்பை உடைத்தமை.
நாட்டில் செய்யவேண்டிய எவ்வளவோ இருக்க மாவீரர் நாள் முதலானவற்றுக்குள் புகுந்துவிளையாட இக் கட்சிக்கு பணமிறைக்க புலம்பெயர் அமைப்பொன்று உள்ளது. அது எந்தப் பின்னணியில் இயங்குகின்றது என்பதை ஊகிப்பது பெரியவிடயமல்ல.
மாணவர்களே! அடுத்தஇலக்கு நீங்களாகவும் இருக்கலாம். புலம்பெயர் தேசத்தின் நிதியின் துணையுடன் உங்களையும் துண்டாட நினைக்கலாம் எச்சரிக்கை .
