
மறைமுகமாக பச்சைக்கொடி காட்டினார் சம்பந்தன்
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தை விடவும், புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் தேர்தல் விஞ்ஞாபனம் முன்னேற்றகரமானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்னவென வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில்,
சஜித் பிரேமதாஸவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் பல முன்னேற்றகரமான விடயங்கள் உள்ளன. நாம் எதிர்பார்த்த விடயங்கள் பலவும் அதில் உள்ளன.
புதிய அரசமைப்பு, மக்களுக்கான அதிகார பகிர்வு, காணாமல்போனோர் விவகாரம், அரசியல் கைதிகள் விடுதலை, சுவீகரிக்கப்பட்ட மக்களின் காணிகள் மீள ஒப்படைப்பு, வடக்கு மற்றும் கிழக்கு அபிவிருத்தி, வேலை வாய்ப்புகள் உட்பட நாம் எதிர்பார்த்த பல விடயங்கள் அதில் உள்ளன.
தேர்தல் விஞ்ஞாபனத்தில் சஜித் வழங்கியுள்ள வாக்குறுதிகளை நாம் அலசி ஆராய்கின்றோம். சஜித்தின் தேர்தல் அறிக்கை மற்றும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை அறிக்கையூடாகத் தெரிவிக்கவுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.