அம்பலாங்கொடை நகரில் உள்ள வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை நிலையத்தின் முகாமையாளர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம், இரண்டு திட்டமிட்ட குற்றக் குழுக்களுக்கிடையிலான மோதலின் விளைவு என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கொல்லப்பட்ட ஹிரான் கோசல என்பவர், கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) சார்பில் அம்பலாங்கொடை மாநகர சபைக்கு போட்டியிட்டவர் ஆவார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் (22) காலை உந்துருளியில் வந்த இருவரில் ஒருவர், விற்பனை நிலையத்திற்குள் சென்று தொலைக்காட்சி வாங்குவது போல் பாசாங்கு செய்து முகாமையாளருடன் உரையாடியுள்ளனர்.
அதன்போது மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியால் முகாமையாளர் மீது சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதுடன், இந்த காட்சி அங்கிருந்த CCTV கெமராவில் பதிவாகியுள்ளது.

கடந்த மாதம் சுட்டுக்கொல்லப்பட்ட ‘கரந்தெனிய சுத்தா’ என்பவரின் மைத்துனரான மிரந்த வருசவிதானவுடன், குறித்த முகாமையாளர் நெருங்கிய தொடர்பைப் பேணி வந்துள்ளார்.
இதன் காரணமாகவே, ‘உணாகூருவே சாந்த’ என்பவரால் இந்தத் தாக்குதல் திட்டமிடப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
இதனிடையே துப்பாக்கிதாரிகள் பயன்படுத்திய உந்துருளி அம்பலாங்கொடை குருந்துவத்தை பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.








