‘சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவோம்’ என்ற தலைப்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு விசேட கடிதமொன்றை அனுப்பியுள்ளது.
தடுப்புக் காவலில் உள்ள முன்னாள் புலனாய்வுப் பிரிவு பிரதானி சுரேஷ் சலே தொடர்பாக சமூகத்தில் எழுந்துள்ள விவாதங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தடுப்புக் காவலில் இருந்த மக்கள் விடுதலை முன்னணியின் ஸ்தாபகர் ரோஹண விஜேவீர உயிரிழந்த சம்பவத்தை நினைவுகூர்ந்துள்ள அவர்கள், கடந்த காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் ஜனநாயக விரோத செயல்கள் மீண்டும் நிகழக் கூடாது என வலியுறுத்தியுள்ளனர்.
அத்துடன், சுரேஷ் சலேவை ஒரு சாதாரண சந்தேகநபராகக் கருதி, சட்டத்தின் முன் அனைவருக்கும் சமமான அணுகுமுறை வழங்கப்பட வேண்டும் என்றும், நீதியான மற்றும் வெளிப்படையான விசாரணை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அழகப்பெரும, டிலான் பெரேரா, டி.பி. ஹேரத், குணபால ரத்னசேகர, கரு கொடித்துவக்கு, திலக் ராஜபக்ஷ, உபுல் கலப்பத்தி, லலித் எல்லாவல மற்றும் கே.பி.எஸ். குமாரசிறி ஆகியோர் குறித்த கடிதத்தில் கையொப்பமிட்டு ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளனர்.








