கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் மட்டும் 1,069 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், நாட்டில் இதுவரை பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை 45,037 ஆக உயர்ந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுவரை 28 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாதாரணமாக நாளாந்தம் 150 முதல் 200 நோயாளர்களே பதிவாகும் நிலையில், சமீப நாட்களில் இந்த எண்ணிக்கை 600 முதல் 650 வரை அதிகரித்திருந்தது. தற்போது அது 1,000 ஐ கடந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலைமை மிகவும் ஆபத்தானதாக மாறியுள்ளதால், நோய்த் தொற்றை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கைகள் அவசியம் எனவும் வைத்தியர் கபில கன்னங்கர வலியுறுத்தியுள்ளார்.
மேலும், அதிகரித்த நோயாளர்களின் எண்ணிக்கையால் வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட சுகாதார ஊழியர்கள் கடுமையான உடல் மற்றும் மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சூழ்நிலை தொடருமானால் எதிர்காலத்தில் டெங்கு மரணங்கள் மேலும் அதிகரிக்கக்கூடிய அபாயம் உள்ளதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.








