கிளிநொச்சியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஓய்வுபெற்ற அதிபர் உயிரிழப்பு
கிளிநொச்சி ஏ-9 பிரதான வீதியில், கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்ற கோர வீதி விபத்தில், ஓய்வுபெற்ற பாடசாலை அதிபர் பெருமாள் கணேசன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
தன்னுடைய வழக்கமான நடைபயிற்சியை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த வேளையில், அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று அவரை மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் படுகாயமடைந்த பெருமாள் கணேசன் முதலில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தின் பல பாடசாலைகளில் ஆசிரியராகவும் அதிபராகவும் பணியாற்றி ஆயிரக்கணக்கான மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு பங்களித்தவர் பெருமாள் கணேசன். ஓய்வுபெற்ற பின்னரும் சமூக மற்றும் கல்வி மேம்பாட்டு நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார்.
அவரது திடீர் மறைவு கிளிநொச்சி மாவட்ட கல்விச் சமூகத்தினரிடையும் பொதுமக்களிடையும் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை, அண்மைக் காலமாக கிளிநொச்சி மாவட்டத்தில் அதிவேக மோட்டார் சைக்கிள் பயணங்களால் பல விபத்துகள் பதிவாகி வருவதாகவும், போக்குவரத்து சட்டங்களை கடுமையாக அமல்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.








