தெல்தெனிய பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றினுள் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில், பிரதான சந்தேகநபராக அடையாளம் காணப்பட்டுள்ள உயிரிழந்த பெண்ணின் காதலனும் அவரது மனைவியும் யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
நுவரெலியா மாவட்டத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவரின் தகவலின்படி, குறித்த தம்பதியினர் நேற்று (23) வெள்ளவத்தையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாண குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையினால் யாழ்ப்பாணப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக நுவரெலியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், பெண்ணின் மரணம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.








