சிவில் சமூகத்துக்கும் அரசியல் கட்சிகளுக்கும் இடையிலுள்ள அடிப்படையான வேறுபாடு என்ன? அரசியல் கட்சிகள் என்பவற்றின் பிரதான இலக்கு அடுத்த தேர்தலாகவே இருக்கும் – தேர்தல் நலன்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாதென்னும் அடிப்படையிலேயே அரசியல் கட்சிகள் ஒவ்வொரு முடிவுகளையும் மேற்கொள்ளும்.
யதார்த்த பூர்வமாக விடயங்களை விளங்கிக்கொள்ளும் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள்கூட, தேர்தல் ஒன்று வருகின்றபோது தங்களைத்தீவிரமானவர்களாகவே காண்பித்துக் கொள்கின்றனர். இதன்காரணமாகவே தமிழ்த் தேசிய அரசியல் பரப்பு எப்போதும் சாத்திய மற்ற – முன்னர் தோல்வி அனுபவங்களை தந்த அரசியல் சுலோகங்களோடு மட்டுமே பயணம் செய்து கொண்டிருக்கின்றது.
ஆனால், சிவில் சமூகம் மக்களின் நலன்களை மட்டுமே கருத்தில் கொள்ளும் அதற்கேற்ப காலத்துக்குப் பொருத்தமான நடவடிக்கைகளை – நிலைப்பாடுகளை வெளிப்படுத்தும். அதற்கேற்றவாறான
செயல்பாடுகளை முன்னெடுக்கும். ஏனெனில், சிவில் சமூகத்துக்கு குறுகிய நோக்கங்கள் இல்லை. அப்படியிருந்தால் அது சிவில் சமூகமுமல்ல. இங்கு சிவில் சமூகம் என்பதால் ஒழுங்குபடுத்தப்பட்ட ஒரு
குழு அல்லது குழுக்களின் கூட்டே கருத்தில் கொள்ளப்படுகின்றது.
யுத்தம் நிறைவுற்று பதினான்கு வருடங்களாகிவிட்டன. இந்தக் காலத்தில் கட்சிகள் அதிகரித்ததே தவிர, மக்கள் வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியவாறான குறிப்பிட்டு சொல்லக்கூடிய விடயங்கள் எதுவும் நடைபெறவில்லை. இந்த நிலையில் தொடர்ந்தும் வெறும் சுலோகங்களை மட்டும் முன்வைத்துக் கொண்டிருக்கும் சூழல்தான் தொடர்கின்றது. இந்த நிலையில் சிவில் சமூக அமைப்புகளும் தமிழ் மக்களின் நலனில் அக்கறையுள்ள புத்திஜீவிகள், சமூக ஆர்வலர்கள் என்போரும் – கட்சிகள் உயர்த்திப் பிடிக்கும் சுலோ
கங்களை உச்சரித்துக் கொண்டிருப்பது சரியா அல்லது இன்றைய சூழலில் எது சாத்தியமோ அதனை அழுத்தம் திருத்தமாக முன் வைப்பதும் அதனை நோக்கி செயல்படுவதும் முக்கியமானதா?
ஏனெனில், கடந்த காலத்தை எடுத்து நோக்கினால் ஒரு விட யத்தை பார்க்கலாம். அதாவது, வாய்ப்புகள் கிடைக்கின்ற ஒவ்வொரு சந்தர்ப்பங்களையும் தமிழர் அரசியல் தரப்புகள் கையாளத் தவறியிருக்கின்றன.
ஒரு விடயத்தில் எப்போதும் தெளிவாக இருக்க வேண்டும். அதாவது, சிங்கள ஆட்சியாளர்கள் தாங்களாக எந்த வொரு விடயத்தையும் செய்யப் போவதில்லை. அவர்கள் அவ்வாறு செய்திருப்பார்களென்றால் வெளியாரின் தலையீடு இலங்கைத் தீவில் ஒருபோதும் ஏற்பட்டிருக்காது.
இந்திய – இலங்கை ஒப்பந்தம் இடம்பெற்றிருக்காது. நோர்வேயின் தலையீடு ஏற்பட்டிருக்காது. இந்தப்பின்னணியில் அரசியல் சூழ்நிலை மாற்றங்களால் கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக புரிந்து
கொண்டு செயல்பட வேண்டிய பொறுப்பு நமது கட்சிகள் என்போருக் குரியதாகும். அது மற்றவர்களுக்குரியதல்ல.2015இல் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து சில வாய்ப்புகள் கிடைக்கப்பெற்றன. அரசியலமைப்பில் இருப்பதை உச்சபட்சமாக பயன்படுத்திக்கொண்டு ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட அதிகாரங்களை முழுமையாகப் பெறுவதற்கான சூழலும் உருவாகியது.
ஆனால், அந்த வாய்ப்பு தவறவிடப்பட்டது. இந்தப் பின்புலத்தில், தற்போது மீண்டுமொரு வாய்ப்பான சூழல் உருவாகி வருகின்றது.
இதனையாவது கட்சிகள் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கட்சிகள் தவறினால் இதனை சிவில் சமூகமும் மக்கள் நலன் தொடர்பில் சிந்திக்கும் புத்திஜீவிகளும் மதத் தலைவர்களும் தங்களின் பொறுப்பாக்கிக்கொள்ள வேண்டும். உண்மைகளை உரத்துக் கூறுவது அனைத்துப் பணிகளுக்கும் முதன்மையானது.