தனது சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும், இல்லை என்றால் உரிய அடையாள அட்டை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இலங்கை அகதி ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டு போர் காரணமாக 1997 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஜாய் (30) என்பவர் தனது 8 வயதில் இலங்கையில் இருந்து கடல் வழியாக தனுஷ்கோடிக்கு அகதியாக வந்து மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டார்.
குறித்த நபர், மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் இருந்து தப்பி, தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டமாக சென்று அங்கு உள்ள மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து 1997 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற உள்ள நாட்டு போரின் போது இரவு தூங்கி கொண்டிருந்த தன்னை தனது பெற்றோர் படகில் இந்தியாவிற்கு ஏற்றி விட்டு விட்டதாகவும்,
காலையில் கண் விழித்து பாத்த போது தான் தனுஷ்கோடி கடற்கரையில் தமிழகத்திற்கு அகதிகளாக வந்த இலங்கை தமிழர்களுடன் இருந்ததாகவும், பின் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், மீண்டும் தனது சொந்த நாடான இலங்கைக்கு திரும்பி அனுப்பி வைக்குமாறு மனு கொடுத்து வருகிறார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அப்போது அவர் மீது நாகர்கோவில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
இந் நிலையில் அங்குள்ள நீதிமன்றம் உடனடியாக குறித்த நபரை இலங்கையில் இருக்கும் பெற்றோரிடம் ஒப்படைக்குமாறு தெரிவித்துள்ளனர்.
ஆனால் இதுவரை ஜாய் இலங்கை திரும்பி செல்ல நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதையடுத்து நேற்று மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த ஜாய் ஆட்சியர் அலுவலகம் அருகே முட்டியிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இது குறித்து தகவலறிந்த கேணிக்கரை பொலிசார் அவரை க்யூ பிரிவு அலுவலகத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.
இலங்கை தமிழர் ஜாய் முட்டியிட்டு ஆட்சியர் அலுவலகம் அருகே தர்ணாவில் ஈடுபட்டதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.