முல்லைத்தீவு மான்குளம் அருகே நவீன கார் ஒன்றுடன் சக்திவாய்ந்த புதையலைக் கண்டறியும் இயந்திரமொன்றையும் இன்னும் சில கருவிகளையும் கைவிட்டு தப்பிச் சென்ற கும்பலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மான்குளம், கனகராயன்குளம் அருகே மர்ம நபர்கள் கும்பல் ஒன்று புதையல் தோண்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் அப்பிரதேசத்தில் கடந்த சனிக்கிழமை மாலை தேடுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் போது புதையல் தோண்டுவதற்கான சக்திவாய்ந்த மெட்டல் டிடெக்டர், மடிக்கணனி ஒன்று, உள்ளிட்ட உபகரணங்களுடன் கார் ஒன்றையும் கைவிட்டு மர்ம கும்பல் தப்பிச் சென்றிருந்தது.
காரையும், குறித்த உபகரணங்களையும் கைப்பற்றிய பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் , தப்பிச் சென்ற சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கான விசேட விசாரணைகளைகளின் பின்னர் ஆறு சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 22, 25, 37, 46 மற்றும் 53 வயதுடைய கலன்பிந்துவெவ, வவுனியா, பலாங்கொடை மற்றும் வெயாங்கொடை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.