மட்டக்களப்பு போரதீவுப் பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட திருப்பழுகாமம் பிரதேசத்தில் வெள்ளிமலை கலாச்சார பண்பாட்டு மண்டபம் திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று (03) வெள்ளிமலை பண்பாட்டு மண்டப தலைவர் ஆ.மகாலிங்கம் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா யுலேக்கா முரளிதரன் கலந்துகொண்டதுடன், சிறப்பு அதிதியாக போரதீவுப் பற்று பிரதேச செயலாளர் சோ.ரங்கநாதன் கலந்துகொண்டார்.
கடந்த மாகாணசபை ஆட்சிக் காலத்தில் மக்கள் பிரதிநிதிகளின் பங்களிப்புடனும், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் வெள்ளிமலை அவர்களின் ஏற்பாட்டிலும் குறித்த ம்ண்டபம் அமைக்கப்பட்டு இதுவரை திறக்கப்படாத நிலையில் இருந்தது.
பல மில்லியன் ரூபாக்கள் செலவிடப்பட்டு அமைக்கப்பட்ட இந்த மண்டபம் திறக்கப்படாத நிலையில் ஏழு வருடங்களுக்கு பின்னர் இந்த மண்டபம் திறந்துவைக்கப்பட்டது.
இந்த நிலையில் புதிய ஆட்சியில் கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் குறித்த மண்டபம் மக்கள் பாவனைக்காக நேற்று திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது இந்த மண்டபம் அமைப்பதற்கு நடவடிக்கையெடுத்த முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கிருஸ்ணபிள்ளை கௌரவிக்கப்பட்டார்.