பதிவு செய்யப்படாத நிதி நிறுவனங்கள் மற்றும் வட்டிக்கு பண பரிவர்த்தனை செய்பவர்கள் தொடர்பான ஒழுங்குமுறையான செயல்முறையை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான நிதி நிறுவனங்களிடமிருந்தும், வட்டிக்கு பண பரிவர்த்தனை செய்து அநீதி இழைக்கப்பட்டவர்களிடமிருந்தும் கடன் இணக்க சபைக்கு கிடைத்த முறைப்பாடுகளை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இவ்வாறான அநீதிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காகவே கடன் இணக்க சபை நிறுவப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அநீதிக்கு ஆளானவர்களிடம் இருந்து கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ள சபை, நிலைமையை சீர்செய்வதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் முன்மொழிவுகளை அழைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, கடன் இணக்க சபை அதன் மாகாண அலுவலகங்கள் மூலம் முன்மொழிவுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
அதன்படி, பெறப்பட்ட முன்மொழிவுகள் சட்டவரைஞர் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டு, பதிவு செய்யப்படாத நிதி நிறுவனங்கள் மற்றும் வட்டிக்கு பண பரிவர்த்தனை செய்பவர்கள் தொடர்பான ஒழுங்குமுறை செயல்முறை தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்படும் என கூறப்படுகிறது.
மேலும், நிதி விவகாரங்களில் அநீதிக்கு ஆளானவர்களின் 917 முறைப்பாடுகள் கடந்த நவம்பர் மாதம் வரை கடன் இணக்க சபையின் நடவடிக்கைகளில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.