பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடீன் மற்றும் பிரபல ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க ஆகியோரது கொலைகள் குறித்த விசாரணைகளை முன்னெடுப்பதில் சிக்கல்கள் காணப்படுவதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்தக் கொலைகள் இடம்பெற்று நீண்ட காலம் என்பதனால் விசாரணைகளை மேற்கொள்வதில் நெருக்கடி நிலைமைகளை சந்திக்க நேரிட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இந்த விடயங்களைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 16 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதில் விசாரணையாளர்கள் அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் ஒருவர் தற்பொழுது உயிருடன் இல்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும், தாஜூடீன் கொலையுடன் தொடர்புடைய சட்ட வைத்திய அதிகாரியும் மரணித்து விட்டார். எவ்வாறெனினும் விசாரணைகளில் சிக்கல்கள் ஏற்பட்டாலும் நீதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சுட்டிக்காட்டினார்.