கிழக்கு மாகாணத்தில் மிகவும் பழமையான தேவாலயங்களுல் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு தாண்டவன்வெளி புனித காணிக்கை மாதா தேவாலயத்தின் வருடாந்த திருவிழா நேற்று முன்தினம் (24) மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
தாண்டவன்வெளி புனித காணிக்கை மாதா ஆலயம் 401வது ஆண்டை பூர்த்தி செய்யும் இலங்கையின் பழமையான ஆலயங்களில் ஒன்றாக கருதப்படுகின்றது.
ஆலயத்தின் பங்குத்தந்தை அருட்தந்தை ஜுலியன் பிரான்சிஸின் தலைமையில் விசேட ஜெபமாலை வழிபாடு நடைபெற்றதுடன் திருவுருவம் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு கொடியேற்ற இடத்தில் விசேட வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து ஆலயத்தின் பங்கு மக்களின் குழுத்தலைவர்களின் பங்களிப்புடன் பங்குத்தந்தையினால் கொடியேற்றம் சிறப்பாக இடம்பெற்றதோடு, தேவாலயத்தில் விசேட திருப்பலி பூஜையும் நடைபெற்றது.
இதன்போது ஆலயத்திற்குள் மாதா மற்றும் ஜோசப்வாஸ் ஆகியோருக்கு அமைக்கப்பட்டுள்ள பீடங்கள் இதன்போது ஆசிர்வதிக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து அருட்தந்தை ஜே.அனிஸ்ரன் அடிகளாரினால் முதலாம் நவநாள் வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்த கொடியேற்ற வழிபாடுகளில் பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
இதன்படி எதிர்வரும் 01ஆம் திகதி மாலை சுற்றுப்பிரகாரம் நடைபெறவுள்ளதுடன் 02ஆம் திகதி காலை திருவிழா திருப்பலி நடைபெறவுள்ளது.