இந்த நாட்டில் தீர்வு இல்லையென்றால், வடகிழக்கினை இந்தியாவின் ஒரு பகுதியாக இணைத்துக் கொள்ளும் சந்தர்ப்பத்தை நாம் கோரவேண்டுமென்று, ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்திருக்கின்றார்.
ரெலோ கூறுவதை ஏனைய தமிழ் தேசியக் கட்சிகளும் கூறுமா? அண்மையில் இலங்கைக்கும் – இந்தியாவிற்கும் இடையில், நிலத் தொடர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான பல்வேறு திட்டங்கள் ஆராயப்பட்டிருந்தன. இரு நாடுகளுக்குமான எரிசக்தி இணைப்பு தொடர்பில் ஏற்கனவே உடன்பாடு காணப்பட்டிருக்கின்றது. இதற்கான பணிகள் விரைவில் முன்னெடுக்கப்படவுள்ளன. அதேபோன்று,
மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த திருகோணமலை துறைமுகத்திற்கும் தென்னிந்தியாவிற்கும் இடையிலான எண்ணெய்க் குழாய்கள் பொருத்துவது தொடர்பான சாத்திய ஆய்வுகளை மேற்கொள்வதற்கான இணக்கப்பாடும் எட்டப்பட்டிருக்கின்றது.
பொருளாதார ரீதியில், வடக்கு – கிழக்குடனான இந்தியாவின் தொடர்புகள் வலுவடைந்துவரும் சூழலிலேயே, ரெலோவின் தலைவர் இவ்வாறானதொருகருத்தை தெரிவித்திருக்கின்றார். இது அடிப்படையில் துணிகரமான ஒரு கருத்து. ஏனெனில் இலங்கைக்குள் தமிழ் மக்கள் தொடர்ந்தும் இரண்டாம் பட்சமாகத்தான் நடத்தப்படுவார்கள் என்றால், தமிழ் மக்கள் வேறு ஏற்பாடு களைத்தானே கோர முடியும். ஒன்றில் தனிநாட்டை தமிழ் மக்கள் கோர வேண்டும் இல்லாவிட்டால் இந்தியாவுடனான மாநில இணைப்பை கோர வேண்டும். தனிநாட்டை கோரினாலும் அதனையும் இந்தியாதான் பெற்றுக் கொடுக்க வேண்டும். அது சாத்தியமானதல்ல.
ஒரு காலத்தில் சிங்கள தலைவர்கள், இலங்கையையே இந்தியாவின் மாநிலமாக இணைக்குமாறு கோரியிருந்தனர். இலங்கை சுதந்திரமடைவதற்கு முன்னர் அவ்வாறான பார்வை சிங்கள அரசியல் தலைவர்கள் மத்தியிலிருந்தது. இலங்கையை இந்தியாவின் ஒரு மாநிலமாக இணைக்குமாறு, இந்தியத் தலைவர்களுக்கு கடிதங்கள் கூட அனுப்பப்பட்டிருந்தன.எனினும் இலங்கை சுதந்திரமடைந்ததை தொடர்ந்து, சிங்கள தேசியவாதம் எழுச்சியுற்றது. இலங்கைத் தீவை ஒரு சிங்கள – பௌத்த தீவாக பேணிப் பாதுகாக்க வேண்டுமென்னும் நிலைப்பாட்டில், சிங்கள ஆளும்வர்க்கம் ஒன்றுபட்டது. இதன் பின்னர் இந்தியாவினால் எப்போதும் தங்களுக்கு ஆபத்து நேரிடலாமென்னும் கருத்துருவாக்கத்தை பரவல்படுத்தினர். தமிழ் மக்களை இந்தி யாவின் விரிவாக்கலுக்கான மக்கள் கூட்டமாக கருதும் சி;ந்தனைமுறைமை சிங்கள தேசியவாத அரசியலில் அங்கமாகியது. இன்றுவரையில் அது தொடர்கின்றது.
இந்திய – இலங்கை ஒப்பந்தமே, முதல் முதலாக, தமிழ் மக்கள் வாழும் வடக்கு – கிழக்கை, தமிழ் பேசும் மக்களின் வரலாற்று வாழ்விடமாக அங்கீகரித்தது. இந்த ஒப்பந்தத்தின் விளைவாகவே, மாகாண சபை முறைமை அறிமுகமானது. அதற்கான அதிகாரங்களை உறுதிப்படுத்தும் விடயமே தற்போதுவிவாதப் பொருளாகியிருக்கின்றது. ஒப்பந்தத்தின்படி, மாகாண சபைகளுக்கு காணி பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும். ஆனால், இன்றுவரையில் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதில் தமிழர் பக்கத்திலும் தவறு கள் உண்டு. ஏனெனில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட காலத்தில் அனைத்து தரப்புக்களும் ஓரணியாக, அதனை முழுமையாக பயன்படுத்த முற்படவில்லை. ஆனால் தற்போதும், காணி பொலிஸ் அதிகாரங்கள் உறுதிப்படுத்தப்படுவதை, தென்னிலங்கையின் பெரும்பான்மை கட்சிகள் உடன்படவில்லை.
இவ்வாறானதொரு பின்புலத்தில், ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனின் கூற்றில் நியாயமுண்டு. ஏனெனில் தமிழ் மக்கள் வேறு என்னதான் செய்வதென்னும் கேள்விக்கான பதிலாகவே, அடைக்கலநாதனின், கூற்று அமைகின்றது. தமிழ் மக்களின் ஜனநாயக கோரிக்கைகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்ட சூழலில்தான், தனிநாட்டுக் கோரிக்கையை நோக்கி, தமிழ் மிதவாத தலைவர்கள் சென்றனர். அதனை அடைவதற்கான திட்டத்துடன் அவர்கள் தனிநாடு தொடர்பில் சிந்திக்கவில்லை. மிதவாதிகளினால் நிலைமை களை கையாள முடியாமல் போனபோதே, இளைஞர்களின் ஆயுதத் தலையீடுகள் உருவாகின. அதுவே ஒரு உள்நாட்டு யுத்தமாக விரிவுகொண்டது. இப் போது, அரசியலமைப்பிலுள்ள – அதுவும் இரண்டு நாடுகளுக்கிடையிலான ஒப்பந்தத்தினால், உறுதிப்படுத்தப்பட்ட அதிகாரங்களைக் கூட, தமிழ் மக்க ளோடு பகிர்ந்தளிக்க முடியாதென்று, சிங்கள ஆளும் தரப்பு கூறுமானால்,
அடுத்து என்னதான் செய்வது? இந்தக் கேள்வியிலிருந்து சிந்தித்தால், அடைக்கலநாதன் கூறுவதுடன் ஏனையவர்களும் கைகோர்க்கத்தான் வேண்டிவரும். இது தொடர்பில் தமிழரசுக் கட்சியின், அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் (முன்னணியின்) நிலைப்பாடு என்ன?