சுதந்திர தினத்தன்று யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் கறுப்புக்கொடி ஏற்றிய மாணவர்களுக்கு எதிராக அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், சுதந்திரதினத்தன்று யாழ்.பல்கலைக்கழகத்தில் இலங்கைக்கொடி இறக்கப்பட்டு பிரதான கம்பத்தில் கறுப்புக்கொடி ஏற்றப்பட்டது.
இந்த விடயம் ஒட்டு மொத்த நாட்டு மக்களுக்கு மாத்திரமல்லாது நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வந்த இராணுவ வீரர்களையும் அவமதிக்கும் செயலாகும்.
இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
அதேபோன்று யாழ்.பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் உள்ளிட்ட தரப்பினர் இதற்கு இடமளித்தமை தொடர்பில் பொறுப்பு கூறவேண்டும்.
அவர்களிடமும் விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும். யாழ் பல்கலைக்கழகம் நாட்டு மக்களின் வரிப்பணத்திலேயே இயங்குகின்றது.
அதேபோன்று பல்கலைக்கழக நிர்வாகத்தினருக்கும் சம்பளம் வழங்கப்படுகின்றது. ஆகவே இது பொருத்தமற்ற செயலாகும். இந்த செயலைப் புரிந்தவர்கள் கைது செய்யப்பட வேண்டும்.
இனவாதத்தைத் தூண்டுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி யாழ் விஜயத்தின் போது குறிப்பிட்டிருந்தார்.
இத்தகைய பின்னணியிலேயே சுதந்திர தினத்தன்று இத்தகைய விடயம் இடம்பெற்றுள்ளது.
ஆகவே இனவாத செயற்பாடாக இதனைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.