1956 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு தேர்தலிலும் வெளிப்படுத்தப்படும் தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு இணங்க, சமஷ்டி கட்டமைப்பில் அதிகாரப் பகிர்வு இருக்க வேண்டும் என்பதே தமது நிலைப்பாடாகும் என பாராளுமன்ற உறுப்பினர் M.A.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
நாட்டின் அரசியலமைப்பில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அதிகாரப் பகிர்வு ஏற்பாட்டை முழுமையாக அமுல்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தமிழ் தேசியப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு, அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம், நீண்ட காலமாக தாமதமாகி வரும் மாகாண சபை தேர்தல்கள் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் கூட்டப்பட்ட சர்வகட்சி மாநாடுகள் தொடர்பாக தௌிவுபடுத்தும் வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி M.A.சுமந்திரன் நேற்று (31) அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளார்.
13ஆவது திருத்தம் இலங்கை அரசியலமைப்பின் ஒரு பகுதியே தவிர, ஒரு தனி இணைப்பு அல்லவெனவும் ஜனாதிபதி உள்ளிட்ட அனைவரும் அதனை நிலைநிறுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் சத்தியப்பிரமாணம் செய்துள்ளதாகவும் அரசியலமைப்பின் ஒரு பகுதியை நடைமுறைப்படுத்தாமல் விடுவது அரசியலமைப்பு முழுவதையும் மீறுவதாகவே அமையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு தாம் தனிநபர் சட்டமூலம் ஒன்றினை தயாரித்து முன்வைத்துள்ளமையை நினைவுபடுத்தியுள்ள அவர், பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மை மூலம் அதனை சட்டமாக்க முடியும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தாக சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்மையில் நடைபெற்ற சர்வகட்சி மாநாடுகளில் மாகாண சபை தேர்தலை இனியும் தாமதிக்காமல் நடத்த வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெளிவாக ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளதாகவும் இந்த விடயத்தில் கூட்டமைப்பின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.