அமெரிக்க உளவுத்துறையால் பகிரப்படும் எந்த தகவலையும் உக்ரைனுடன் பகிரக் கூடாது என்று பிரித்தானியாவுக்கு, வெள்ளை மாளிகை தடை விதித்துள்ளது.
ட்ரம்ப் – ஸெலன்ஸ்கி இடையேயான சந்திப்பு விவாதத்தில் முடிந்தமையால் உக்ரைனுக்கு அளித்துவந்த அனைத்து வகையான இராணுவ உதவிகளையும் நிறுத்திவைப்பதாக டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
ஆயுதங்கள் மட்டுமின்றி வான்வழித் தாக்குதல்களைக் கண்காணித்து எச்சரிப்பது, உளவுத் தகவல் தருவது ஆகியவற்றையும் அமெரிக்கா நிறுத்தியுள்ளது.

இந்த நிலையில், பிரித்தானியாவின் உளவுத்துறையுடன், அமெரிக்க உளவுத்துறை பகிரும் தகவல்களை உக்ரைனுடன் பகிரவும் தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
போர் தொடங்கியதில் இருந்து மூன்று ஆண்டுகளாக பிரித்தானியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட மேற்கத்தேய நாடுகள் தாங்கள் பெற்றுக்கொள்ளும் ரஷ்யாவுக்கு எதிரான உளவுத் தகவல்களை உக்ரைனுடன் பகிர்ந்து வருகின்றனர்.
அமெரிக்காவும் ‘உக்ரைனுக்கு வெளியிடக்கூடியவை’ என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் சில தகவல்களை பிரித்தானியாவுடன் பகிர்ந்து வந்தது.
தற்போது அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் உளவுச் செய்திகளை உக்ரைனுக்கு பகிர தடை விதிக்கப்பட்டுள்ளது.