மட்டக்களப்பு புதூர் பிரதேசத்தில் ஐஸ் போதை பொருள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் குமார் குழுவைச் சேர்ந்த இருவரை நேற்று (05) இரவு கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த பிரதேசத்தில் இரு குழுக்கள் இயங்கி வருவதாகவும், இவர்கள் வாள்வெட்டு மற்றும் சண்டைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதில் பல்வேறு குற்றச் செயல்களில் தொடர்புபட்டு இவர்கள் தலைமறைவாகி வந்துள்ளனர். இந்த நிலையில் பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து போதை ஒழிப்பு ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி சப் இன்பெக்ஸ்டர் ரி. கிருபாகரன் தலைமையிலான குழுவினர் சம்பவதினமான நேற்று இரவு குறித்த பிரதேசத்தில் தலைமறைவாகியிருந்த வீட்டை முற்றுகையிட்டு, அங்கு 3100 மில்லிக்கிராம் ஐஸ்போதை பொருளுடன் ஒருவரையும், கனரக கூரிய ஆயுதங்களுடன் ஒருவர் உட்பட இருவரை கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்கள் குமார் குழுவைச் சேர்ந்தவர்கள் எனவும், பிரதேசத்தில் அமைதியின்மையை ஏற்படுத்தி வருபவர்கள் எனவும் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டவர்கள் எனவும், இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.