2023 லங்கா பிரிமியர் லீக் கிரிக்கட் தொடரின் ஆரம்ப நிகழ்வின் போது, நாட்டின் தேசிய கீதத்தின் பொருள் மாறுபட இசைத்தமைக்காக பாடகி உமாரா சிங்கவன்ச மன்னிப்பு கோரியுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில், 2023ம் ஆண்டுக்கான லங்கா பிரிமியர் லீக் தொடர் ஆரம்பமானது. குறித்த ஆரம்ப நிகழ்வின் போது, நாட்டின் தேசிய கீதம் உமாரா சிங்கவங்கவின் ஊடாக ஒபேரா முறையில் இசைக்கப்பட்டமையினால் அது பாரிய சர்ச்சையினை ஏற்படுத்தியிருந்தது.
தேசிய கீதத்தின் பொருள் மற்றும் இசையினை மாற்றுவது அல்லது திரிவு படுத்துவது அரசியலமைப்பின் படி,குற்றமாகும். எனவே, இது தொடர்பில், பொது நிர்வாக அமைச்சின் குழுவொன்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், அவரால் நிகழ்வில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட விதம் மற்றும் அதற்காக அவர் பயிற்சி பெற்றமை குறித்தும் ஸ்ரீ லங்கா கிரிக்கட்டில் நேற்று ஆராயப்பட்டிருந்தது.
அத்துடன் கல்வி அமைச்சிலும் தேசிய கீதம் தொடர்பான தகவல்கள் ஆராயப்பட்டிருந்தன.
இந்தநிலையில், சர்ச்சைக்குள்ளான பாடகி உமாரா சிங்கவன்ச குறித்த சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட அனைவரிடத்திலும் மன்னிப்பு கோருவதாக குறிப்பிட்டுள்ளார்.
தாம் ஒரு போதும் நாட்டின் கீர்த்திக்கும், தேசிய கீதத்தின் பெருமைக்கும் பாதிப்பினை ஏற்படுத்த விரும்பியதில்லை என தெரிவித்துள்ளார். அத்துடன், நாட்டின் பெருமையை பாதுகாப்பதற்கும், தேசிய கொடியை சுமப்பதற்கும் எப்போதும் பெருமைக்கொள்வதாக பாடகி உமாரா சிங்கவன்ச அறிக்கையொன்றை விடுத்து குறிப்பிட்டுள்ளார்.