அதானி நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட காற்றாலை மின்சாரத் திட்டம் இன்னும் இரத்து செய்யப்படவில்லை என வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று(08.03.2025) நடைபெற்ற வலுசக்தி அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதானி திட்டத்தினால் உருவாக்கப்படும் மின்சாரத்தின் விலைகள் அதிகமாக இருந்ததால் அதனை மீள் பரிசீலனை செய்ய அமைச்சரவைக்கு அனுப்பப்பட்டதாக குமார ஜயக்கொடி சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்த நேரத்திலேயே அதானி நிறுவனம், இந்த திட்டத்திலிருந்து விலகுவதாக தெரிவித்து, இலங்கை முதலீட்டு சபைக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளது.

அதன்படி, முதலீட்டு சபை இது குறித்து அமைச்சுக்கு தெரிவித்ததாகவும் குமார ஜயக்கொடி கூறியுள்ளார்.
எனினும், அதானி காற்றாலை மின்சார திட்டம் குறித்து இலங்கையில் உள்ள அதானி நிறுவனத்தின் பிரதிநிதி அலுவலகத்துடனே கலந்துரையாடப்பட்டுள்ளது.
எனவே, குறித்த விடயத்தை பரிசீலிக்க நிறுவனத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். கடிதம் அனுப்பப்பட்டு இரண்டு வாரங்களுக்குள் பதிலை எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், குறித்த பதில் எதிர்மறையானதாக இருந்தால் மாற்று உபாயம் தொடர்பில் ஆலோசிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், எதிர்காலத்தில் இதுபோன்ற திட்டங்கள் அரசுகளுக்கிடையேயான ஒப்பந்தங்கள் மற்றும் போட்டி கொள்முதல் மூலம் மட்டுமே மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.