ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் முன்னாள் அமைச்சர் டிரான் அலஸுக்கும் இடையிலான ஒப்பந்தமொன்றின் காரணமாக முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைதுசெய்ய முடியாமல் போயுள்ளதாக முன்னாள் அமைச்சரும் ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவருமான பாடலி சம்பிக்க ரணவக்க குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.
டிரான் அலஸ், ஊழல் அல்லது கொலைச் செய்தாலும் கூட அநுரகுமார திசாநாயக்க அவருக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கபோவதில்லை என்றும் தெரிவித்தார்.
ஐக்கிய குடியரசு முன்னணியின் ஹோமாகம தேர்தல் செயற்பாட்டு மையம் மற்றும் அடுத்த தேர்தல் பிரசாரம் ஆகியவற்றை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு ஹோமாகம பிரதேசத்தில் நேற்று முன்தினம் (08) இடம்பெற்றது.
அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேசபந்து தென்னகோனை ஏன் கைதுசெய்ய முடியாமல் இருக்கிறது? டிரான் அலஸ் அவருக்கு பக்கபலமாக இருக்கிறார். டிரான் அலஸ் எவ்வாறான மோசடிகளை செய்திருந்தாலும், ஒருவேளை இ – விசா அல்லது இ- கடவுச்சீட்டு அல்லது அவர் வேறு ஏதாவது மோசடியை செய்திருந்தாலும் அநுரகுமார அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கமாட்டாா். அதுவே இருவருக்கும் இடையிலான ஒப்பந்தமாகும்.
சமூக ஊடகங்களுக்குச் சென்றால் இந்த அரசாங்கம் கூறியுள்ள பொய்களை நன்கு அறிந்து கொள்ளலாம். தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் தற்போது ஏதாவதொரு விடயத்தை செய்கிறது என்றால் அதற்கு முற்றிலும் புறம்பான விடயங்களையே கடந்த ஐந்து வருடங்களில் செய்துள்ளது. இவர்களின் நகைச்சுவை செயற்பாடுகளுக்கு எதிராக இந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் வாக்களிக்க வேண்டும்.
நாம் ஏமாற்றமடைந்து விட்டோம். எம்மை ஏமாற்றிவிட்டார்கள். எரிபொருளுக்கு வரி அறவிட மாட்டோம் என்றார்கள். ஒரளவு மின்னுக்கான கட்டணத்தை மூன்றிலொன்றாக குறைப்போம் என்று கூறினார்கள்.
நிவாரணம் கொடுப்போம் என்றார்கள். சம்பளத்தை அதிகரிப்போம் என்றார்கள். திருடர்களைப் பிடிப்போம் என்றார்கள். அதில் ஒன்றும் இடம்பெறவில்லை.

திருடர்களைப் பிடிப்போம் என்று கூறிவிட்டு, வெசாக் தினத்துக்காக அமைச்சின் நிதியிலிருந்து ஒரு இலட்சத்து 35 ஆயிரம் ரூபாவை செலவுசெய்து கார்ட் வெளியிட்டதாக கூறி பிரியங்க ஜெயரத்னவை கைது செய்துள்ளார்கள். ஆனால் மத்திய வங்கி மோசடியுடன் தொடர்புடைய அர்ஜுன மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வருவோம் என்றே எமக்கு கூறினார்கள். ஆனால் அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக இருக்கும்வரை அர்ஜுன மகேந்திரனுக்கு துளியளவும் பாதிப்பு ஏற்படாது. அவரை அழைத்து வர மாட்டார்கள்.
இவர்களுக்கு இடையில் இருக்கும் ஒப்பந்தம் என்னவென்பதும் எங்களுக்கு தெரியும்.
தேசபந்து தென்னகோனை ஏன் கைதுசெய்ய முடியாமல் இருக்கிறது. தேசபந்துவின் பின்னணியில் முன்னாள் அமைச்சர் டிரான் அலஸ் செயற்படுகிறார். எனவே, அநுரகுமார ஜனாதிபதியாக இருக்கும்வரை டிரான் அலஸின் இ – விசா, இ– கடவுச்சீட்டு அல்லது என்ன குற்றமிழைத்தாலும் கொலை செய்தாலும் அவற்றில் அநுர கையிடமாட்டாா். அதுவே இவர்களுக்கு இடையில் இருக்கும் ஒப்பந்தமாகும்.
எங்களுக்கு எதிராக கோப்புக்களை தயாரித்து எங்களை கைதுசெய்யுமாறு சட்டமா அதிபருக்கு கூறுவதாகவும், அவ்வாறு எப்படி எங்களை கைதுசெய்வது என்று பொலிஸாா் எங்களிடம் கேட்கிறார்கள். இவர்களுக்கு இடையிலான ஒப்பந்தம் என்ன? வியாபார நோக்கம் என்ன? பொதுமக்கள் எந்தளவுக்கு ஏமாற்றப்பட்டுள்ளார்கள் என்பதை எதிர்வரும் நாட்களில் மக்களுக்கு பகிரங்கப்படுத்துவோம் என்றார்?.