ஆயுதப்படைகளின் முன்னாள் தளபதிகள் மீது பிரித்தானியாவால் விதிக்கப்பட்ட தடைகள் ஒருதலைப்பட்சமான நடவடிக்கை என்றும், உள்ளூர் நல்லிணக்க செயல்முறைக்கு அது எந்த வகையிலும் உதவாது என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு என்றும் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் இலங்கைக்கான பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகரிடம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் இராணுவத் தளபதிகள் சவேந்திர சில்வா மற்றும் ஜகத் ஜெயசூரிய, முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் கருணா அம்மான் என்றும் அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோர் மீது பிரித்தானியா தடைகளை விதித்திருந்தது.

இதனையடுத்து சவேந்திர சில்வா, வசந்த கரன்னாகொட, ஜகத் ஜெயசூரிய மற்றும் கருணா அம்மான் ஆகியோருக்கு பிரித்தானியா விதித்துள்ள தடை தொடர்பில் அரசாங்கத்தின் உறுதியான நிலைப்பாட்டை ஜனாதிபதி நாட்டு மக்களுக்கும், சர்வதேசத்துக்கும் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என தொடர்ச்சியாக பெரும்பான்மையின அரசியல்வாதிகள் பலரும் கோரிக்கை முன்வைத்து வந்தனர்.
இந்த பின்னணியில் அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.