இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம் என்று பாகிஸ்தானின் அமைச்சர் மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளார். பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது .
பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் தொடங்கி பல்வேறு அமைச்சர்கள் இந்தியாவுக்கு எதிராக அணுகுண்டு மிரட்டல்களை விடுத்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது தகவல்தொழில் நுட்பத்துறை அமைச்சர் அதாவுல்லா தரார் அளித்த பேட்டியில்,
‘சிந்து நதி நீரை நிறுத்துவதற்கான எந்தவொரு முயற்சியும், பாகிஸ்தானுக்கு எதிரான போர் அறிவிப்பாகக் கருதப்படும். எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் கடுமையாக பதிலடி கொடுக்கப்படும். இந்திய அரசு பாகிஸ்தானில் தீவிரவாதத்தை பரப்புகிறது. அதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன.

பாகிஸ்தானில் இருக்கும் தீவிரவாதிகளுக்கு இந்தியா நிதி மற்றும் ஆயுதங்களை வழங்குகிறது. இந்தியாவை சேர்ந்த குல்பூஷன் ஜாதவை நாங்கள் கைது செய்யாமல் இருந்திருந்தால், இந்த உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்திருக்காது.
தீவிரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தான் இராணுவம் பெரும் வெற்றியை பெற்றுள்ளது. தீவிரவாதத்தை எதிர்க்கும் இந்தியா, பாகிஸ்தானில் நடந்த ஜாஃபர் ரயில் கடத்தல் சம்பவத்தை ஏன் கண்டிக்கவில்லை.
பாகிஸ்தான் எப்போதும் தனது நாட்டின் இறையாண்மையைப் பாதுகாத்து வருகிறது; மேலும் எந்தவொரு ஆத்திரமூட்டும் நடவடிக்கைக்கும் தீர்க்கமான பதிலடி கொடுக்கப்படும்’ என்றார்.
பஹல்காம் தாக்குதலுக்கு பின்னர், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகள் மோசமாகிவிட்ட நிலையில், பாகிஸ்தான் தலைவர்கள் தொடர் எச்சரிக்கைகளை விடுத்து வருகின்றனர்.