கச்சத்தீவை தாரை வார்த்தது யார் என பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான பதிலுரையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
மணிப்பூரில் வன்முறையை தடுக்க மத்திய அரசு முன்வரவில்லை என்பதை கண்டித்து மத்திய அரசு மீது நம்பிக்கையில்லை என எதிர்க்கட்சிகள் தீர்மானம் கொண்டு வந்தன. அந்த தீர்மானத்தின் மீது நேற்றைய தினம் எதிர்க்கட்சிகள் பேசி முடித்தன.
மேலும் அமித்ஷாவும் மணிப்பூர் குறித்து நேற்று பேசினார். இந்த நிலையில் இன்றைய தினம் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி லோக்சபாவில் 2 மணி நேரத்திற்கும் மேலாக உரையாற்றி வருகிறார்.
அவர் கூறுகையில் ஏழைத்தாயின் மகன் பிரதமராக இருப்பதை எதிர்க்கட்சிகளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. காங்கிரஸ் கட்சி ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட ஒரு நிறுவனம் ஆங்கிலேயர்களின் நிறுவனமே காங்கிரஸ். ஐக்கிய முற்போக்கு கூட்டணி முற்றிலுமாக புதைக்கப்பட்டு விட்டது. இந்த கூட்டணி இறந்ததற்கான இறுதி அஞ்சலி பெங்களூரில் அனுசரிக்கப்பட்டது. இந்தியா (INDIA) என்பது கூட்டணி அல்ல. இதில் இரு I கள் இருப்பதால் (நான் என்ற) அகங்காரத்தின் கூட்டணியாகும். ராகுல் காந்தி 24 மணி நேரமும் என்னையே நினைத்துக் கொண்டிருக்கிறார் என பேசினார். அப்போது எதிர்க்கட்சிகள் மணிப்பூர் என நீண்ட நேரமாக கோஷமிட்டும் அவர் எதுவும் பேசாததால் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
இவர்கள் வெளிநடப்பு செய்தவுடன் பிரதமர் நரேந்திர மோடி மணிப்பூர் குறித்து பேசினார். அவர் பேசுகையில் மணிப்பூர் குறித்து அமித்ஷா விரிவான விளக்கத்தை அளித்துவிட்டார். மணிப்பூர் மாநிலத்தில் நிச்சயம் அமைதி திரும்பும் என நான் முழுமையாக நம்புகிறேன்.
மணிப்பூரில் முதல்வர் பைரான் சிங் அமைதியை நிலைநாட்ட உழைத்து வருகிறார். வடகிழக்கு மாநிலங்களுக்கு 50 முறை நான் பயணம் செய்துள்ளேன். ஆனால் வடகிழக்கு மாநிலங்களை பிரதமராக இருந்த நேரு புறக்கணித்ததன் விளைவைத்தான் தற்போது அனுபவிக்கிறோம். 1962வது ஆண்டு அசாமுக்கு நேரு துரோகம் செய்துவிட்டார். புதிய உலகத்தின் மைய பகுதியாக வடகிழக்கு மாநிலங்கள் இருக்கும். மணிப்பூரில் தற்போதைய சூழலுக்கு காங்கிரஸ்தான் காரணம்.
காங்கிரஸுக்கு அரசியலை தாண்டி வேறு எதையும் யோசிக்கத் தெரியாது. கச்சத்தீவை தாரை வார்த்தது யார், நமக்கு சொந்தமான பகுதியை வேறு ஒரு நாட்டிடம் ஒப்படைத்தவர்கள் யார்,இந்திரா காந்தியின் ஆட்சியில்தான் கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டது. ஆனால் தமிழக முதல்வர் கச்சத்தீவை மீட்டு கொடுக்க வேண்டும் என கடிதம் எழுதி வருகிறார். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.