அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல்தான் இந்த நாட்டின் வரலாற்றில் இடம்பெறவுள்ள அரசியல் யுத்தமாக இருக்குமென்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸநாயக்க தெரிவித்திருக்கின்றார். அநுர இவ்வாறானதொரு கருத்தை எவ்வாறானதோர் அர்த்தத்தில் கூறுகின்றார் – எதனை மனதில் வைத்துக் கூறுகின்றார் என்பது அவருக்கு மட்டுமே புரிந்திருக்கும். ஆனால், இந்தக் கூற்றை நாம் பல கோணங்களில் ஆராயலாம்.
கோட்டாபயவின் சிங்கள – பௌத்த எழுச்சி ‘அறகலய’வால் வீழ்த்தப்பட்டது. பொருளாதார நெருக்கடியின் விளைவால்தான் கோட்டாபய ராஜபக்ஷ வீழ்த்தப்பட்டார் என்றாலும்கூட கோட்டாபயவின் வீழ்ச்சியானது இலங்கையின் – குறிப்பாக தென்னிலங்கையின் அதிகார அரசியலில் பெரும் உடைவை ஏற்படுத்தியிருக்கின்றது. எவருமே எதிர்பாராத வகையில் ஓர் ஆசனத்துடன் முடங்கிக் கிடந்த ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியானார்.
இந்த நிலையில், அவர் தொடர்ந்தும் அதிகாரத்தில் இருப்பதா அல்லது அரசியல் அரங்கிலிருந்து வெளியேறுவதா என்னும் கேள்விக்கான பதிலாகவே அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் அமையவுள்ளது.இவ்வாறானதொரு பின்னணியில்தான் ரணில் விக்கிரம சிங்கவுடன் மோதவுள்ள வேட்பாளர்கள் யாரென்னும் கேள்வி எழுந்திருக்கின்றது. அநுரகுமார திஸநாயக்கவின் கூற்றை உற்றுநோக்கினால் ஜனாதிபதி தேர்தலானது நாட்டை ஓர் அரசியல் யுத்தத்துக்குள் தள்ளப் போகின்றது!
அவ்வாறாயின், அரசியல் சூழலை அரசியல் யுத்தமாகமாற்றுமளவுக்கு வெளித்தலையீடுகள் இடம்பெறுமா என்னும் கேள்வி எழுகின்றது. ஏனெனில், எவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்கூட இந்திய – அமெரிக்க – சீன முத்தரப்பு வியூகங்களுக்குள் நாட்டின் அரசியல் அதிகாரம் சிக்கியிருக்கின்றது. இதில், இந்திய -அமெரிக்க நகர்வுகள் என்பது ஓரணியாகவே இருக்கும்.
இந்தியாவின் அயல்நாடுகளில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருகின்ற நிலையில் இந்தியாவும் அமெரிக்காவும் ஒரு நேர்கோட்டில்தான் பயணிக்கின்றது.உலகளவில் தனது செல்வாக்கை நிலைநிறுத்தும் நகர்வுகளில் தீவிரம் காண்பித்துவரும் சீனா தனது செல்வாக்கை தக்கவைப்பதற்கான உத்திகள் தொடர்பில் பலவாறான நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றது. இதில் பிரதானமானது சிறிய நாடுகளின் அரசியல் அதிகாரத்தில் செல்வாக்குச் செலுத்தும் தரப்புகள் மத்தியில் தனது செல்வாக்கை அதிகரிப்பது. இந்தபின்புலத்தில் நோக்கினால் இலங்கையின் அரசியல் அதிகாரத்தில் செல்வாக்குச் செலுத்தும் அரசியல் உயரடுக்கு ஒன்றை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்வது சீனாவை பொறுத்தவரையில் இன்றியமையாதது.
அவ்வாறாயின், அவர்களுக்கு அடுத்த ஜனாதிபதி தேர்தலில் முற்றிலுமாக இந்தியாவின் அமெரிக்காவின் கையை ஓங்குவதை தடுக்க வேண்டிய தேவைப்பாடு உண்டு. இந்த பின்புலத்தில் இந்திய – அமெரிக்க நகர்வுகளுக்கு சமாந்தரமாக சீனாவும் நிச்சயம் அரசியல் கட்சிகளை கையாள முற்படும். ஒருவேளை, இதனைத்தான் அநுரகுமார திஸநாயக்க அரசியல் யுத்தமென்று கூறுகின்றார் போலும்.