பாடசாலைகள் மற்றும் அது தொடர்பான பிரதேசங்களில் போதைப்பொருள் பரவுவதைத் தடுப்பதற்காக நிறுவப்பட்ட கண்காணிப்புக் குழுக்கள் கம்பஹா பிரதேச செயலகப் பிரிவில் முறையாகச் செயற்படுவதில்லை எனத் தெரியவந்துள்ளது.
பல பாடசாலைகளில் பல்வேறு வகையான போதைப் பொருட்கள் விநியோகிக்கப்படுவதாகவும் சில மாணவர்கள் அவற்றிற்கு அடிமையாகியுள்ளதாகவும் பொலிஸ் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
அதிபர்கள், பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள், பொலிஸார் மற்றும் ஏனைய பாதுகாப்புப் பிரிவினரை உள்ளடக்கிய கண்காணிப்புக் குழுக்களை நிறுவுவது வலயக் கல்விப் பணிப்பாளரின் பொறுப்பாகும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
கம்பஹா மாவட்டச் செயலகத்தில் நேற்றுமுன்தினம் (15) நடைபெற்ற கம்பஹா பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கிராமிய மட்டத்தில் பரவும் போதைப்பொருள் கடத்தலை தடுப்பதற்கு கண்காணிப்புக் குழுக்கள் சிறந்த சேவையை வழங்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், பல்வேறு போதைப் பொருட்களுக்கு அடிமையாகும் பாடசாலை மாணவர்களை எச்சரித்து, அவர்களை மனநல மருத்துவ மனைகளுக்கு அனுப்புமாறும் அமைச்சர் பொலிஸ் அதிகாரிகளிடம் தெரிவித்தார். அதன் பின்னர், அதிபர்கள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அந்த மாணவர்கள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறும் அமைச்சர் அறிவுறுத்தினார்.