ஒரு நாட்டின் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் நீதித்துறையின் சுயாதீனம் முக்கியமானது. இலங்கையின் நீதித்துறையின் சுயாதீனம் தொடர்பில் சர்வதேச அரங்கில் கேள்விகளுண்டு. இந்த நிலையில், இலங்கையின்
நீதித்துறை இன அடிப்படையைக் கொண்டதா என்னும் கேள்வி எழுந்திருக்கின்றது.
பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தமிழ் நீதிபதி ஒருவருக்கு எதிராகத் தெரிவித்திருக்கும் கருத்துகள் பாரதூரமானவை. முல்லைத்தீவு நீதிபதி குருந்தூர்மலை விவகாரத்தில் வழங்கிய தீர்ப்பை கடுமையாக விமர்சித்திருக்கும் வீரசேகர தனது பாராளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி ஒரு நீதிபதிக்கு எதிராகப் பேசி வருகின்றார்.
தமிழ் சட்டத்தரணிகள் இதனை ஆட்சேபித்து தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கின்றனர். தமிழ் சட்டத்தரணிகளின் எதிர்ப்பு நியாயமானது.இது தமிழ் – சிங்கள சட்டத்தரணிகளின் பிரச்னையல்ல – மாறாக,
இலங்கையின் நீதித்துறை தொடர்பானது. சரத் வீரசேகரவின் அடாவடி செயல்பாட்டை இலங்கையின் சட்டத்தரணிகள் சங்கம் எதிர்க்க வேண்டும். நீதித்துறைக்குள் இனவாத தமிழர் விரோத அரசியலை கலக்க
முயற்சிக்க வேண்டாமென்று அனைவரும் ஒரு குரலில் பேச வேண்டும். இதுவரையில் அவ்வாறான முதிர்ச்சியை காணமுடியவில்லை.
சட்டத்தரணிகள் தமிழ், சிங்களெமென்று பிரிந்து செயல்படும் போக்கே மேலோங்கிக் காணப்படுகின்றது. இது ஆரோக்கியமானதல்ல.தமிழ் மக்கள் இலங்கையின் நீதித்துறையின்மீது நம்பிக்கை வைக் கும் சூழல் முற்றிலும் அற்றுப்போய் வருகின்றது. எனவே, இந்த விடயத்தில் தென்னிலங்கை சட்டத்தரணிகள் அனைவரும் தமிழ் சட்டத்தரணிகளுடன் கைகோக்க வேண்டும் – அவர்கள் உண்மையிலேயே
நீதித்துறையின் சுயாதீனத்தை விரும்புபவர்களாக இருந்தால்.
அரசாங்கம் தென்னாபிரிக்க மாதிரி உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவொன்றை பரிசீலித்து வருவதாகக் கூறிவருகின்றது. உள்நாட்டு நீதி பொறிமுறை தொடர்பில் பேசிவருகின்றது- ஆனால், பாதிக்
கப்பட்ட மக்களோ உள்நாட்டு பொறிமுறையின் மீதான அவநம்பிக்கையை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்கள் சர்வதேச விசாரணையொன்றைக் கோரிவருகின்றனர். இவ்வாறானதொரு சூழலில்தான், சரத் வீரசேகர ஒரு தனிநபராக ஒட்டுமொத்த நீதித்துறைக்கும் சவால் விடுக்கின்றார்.
ஒரு நீதிபதிக்கு எதராகப் பேசுகின்றார். நீதிபதியின் நடவடிக்கையை எதிர்க்கின்றார். ஆனால், சரத் வீரசேகரவுக்கு எதிராக எந்தவொரு சட்ட நடடிவடிக்கையும் இதுவரையில் எடுக்கப்படவில்லை. ஒரு தென்னிலங்கை அரசியல்வாதியால் ஒரு தமிழ் நீதிபதியின் தீர்ப்புக்கு எதிராகப் பேச முடியுமென்றால் – அதன் அடிப்படையில் சிங்கள மக்களை தமிழ் நீதிபதிக்கு எதிராக திருப்ப முடியுமென்றால் – பாதிக்கப்பட்ட மக்களின் உள்நாட்டு பொறிமுறையின்மீதான அவநம்பிக்கை முற்றிலும் நியாயமானது.
இலங்கையின் நன்மதிப்பை சர்வதேசளவில் பாதுகாக்க வேண்டும் என்னும் எண்ணம் சிங்கள சட்டத்தரணிகளுக்கு சிறிதளவாவது இருந்தால் அவர்கள் அனைவரும் சரத் வீரசேகரவுக்கு எதிராக அணிதிரள
வேண்டும். இனவாத அரசியலை நீதிமன்றத்திற்குள் கொண்டுவர வேண்டாமென்று தமிழ் – சிங்கள சட்டத்தரணிகள் என்னும் பேதம் மறந்து – நாம் சட்டத்தரணிகள் – என்னும் ஒரு சுலோகத்தின் கீழ் சரத்
வீரசேகர போன்ற அரசியல்வாதிகளை எதிர்க்க வேண்டும்.இந்த விடயத்தில் சட்டத்தரணிகள் மற்றும் சட்டம் – ஒழுங்கை பாதுகாக்க வேண்டுமென்னும் எண்ணம் கொண்ட சிங்கள சிவில் சமூக அமைப்புகள் அனைவரும் ஓரணியாக செயல்பட வேண்டும். இந்த விடயத்தில் பொறுப்புடன் செயல்படத் தவறினால் – எதிர்காலத்தில், இலங்கையின் அனைத்து நீதிபதிகளும் இனவாத அரசியலில் செல்வாக்குச் செலுத்தக்கூடிய அனைத்து அரசியல்வாதிகளையும் கண்டு அஞ்சவேண்டிவரும்.