கிழக்கு மாகாணத்திலுள்ள இடங்களை இந்தியாவுக்கு வழங்க மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து முயற்சிப்பதாக திருகோணமலை பொல்ஹேன்கொட உபரத்ன தேரர் குற்றம் சாட்டியுள்ளார்.
செந்தில் தொண்டமான் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டதன் பின்னர் கிழக்கு மாகாணத்தில் காணி தொடர்பான பல பிரச்சினைகள் உருவாகியுள்ளதாக இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், இந்தியாவுக்கு இலங்கையின் இடங்களை கொடுப்பதில் எமக்கு எந்தவொரு பிரச்சினையும் இல்லை. எனினும், மக்கள் வாழும் பிரதேசங்களை யாருக்கும் கொடுக்க நாம் அனுமதிக்க மாட்டோம்.
யுத்த காலத்தின் போதும் பல நெருக்கடிகளுக்கு மத்தியிலும் குறித்த பகுதியில் சிங்கள, தமிழ், முஸ்லிம் ஆகிய அனைத்து தரப்பினரும் வாழ்ந்தனர்.இவ்வாறாக அப்பகுதியில் வாழும் அனைத்து தரப்பினரையும் விரட்டி, அதனை இந்தியாவுக்கு வழங்க முடியாது. இதனை நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.
கிழக்கு மாகாணத்தில் உள்ள அப்பாவி மக்களின் நிலங்களை இந்தியாவுக்கு வழங்க கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் போது ஊடவியலாளர்களுக்கான அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. கிழக்கு மாகாண ஆளுநர் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் வெளியுலகத்திற்கு தெரிய வருவதை அவர் விரும்பவில்லை என்பதே இதற்கான முதன்மையான காரணி.
நான் ஒன்றைக் கூற விரும்புகிறேன். கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சிங்கம் ஆக முயற்சிக்க கூடாது. மக்களை மேலும் பாதிப்படையச் செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுக்க கூடாது.
கிழக்கின் ஆளுநருக்கு அதிபரை விட அதிக பாதுகாப்பும் வாகனங்களும் வழங்கப்பட்டிருக்கிறது. இதற்கு முன்னதாக இருந்த எந்தவொரு ஆளுநரும் இவ்வாறு செயற்படவில்லை. இது அரச சொத்துக்களை வீணடிக்கும் ஒரு செயலாகவே நாம் கருதுகிறோம்.
சில அரச அதிகாரிகளுக்கு கட்டாய இடமாற்றம் வழங்கும் நடவடிக்கைகளும் செந்தில் தொண்டமானால் தற்போது மேற்கொள்ளபட்டிருப்பதாக எமக்கு தெரிய வந்துள்ளது. இது அவரது அகங்காரத்தன்மையை வெளிக்காட்டுகிறது” – என்றார்.