கிளிநொச்சி – பளை இயக்கச்சி இராணுவ முகாமில் பணியாற்றும் இராணுவச் சிப்பாய் ஒருவர் காவல் கடமையில் இருந்த சமயம் அவரது துப்பாக்கி, 4 ரவைக் கூடுகள், ரவைகள் என்பவை களவாடப்பட்டதாக தெரியவந்துள்ளது.
இவ்வாறு களவாடப்பட்ட துப்பாக்கியைத் தேடிய இராணுவப் புலனாய்வாளர்களுக்கு, அதே முகாமில் பணியாற்றும் சக இராணுவச் சிப்பாய் ஒருவரும் காணாமல் போயிருந்தமை தெரியவந்தது.
இதனால் சந்தேகத்தின் அடிப்படையில் யாழில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தொடருந்தில் மேற்கொண்ட சோதனையில் காணமல்போன சிப்பாய் பயணிப்பது கண்டறியப்பட்டதுடன், தொடருந்தில் மேற்கொண்ட தொடர் சோதனையில் இராணுவச் சிப்பாய் எடுத்துச் சென்ற பயணப் பையும் மீட்கப்பட்டது.
இவ்வாறு மீட்கப்பட்ட இராணுவச் சிப்பாயின் பயணப்பையில் மிகவும் நூதனமாக பொதி செய்யப்பட்ட துப்பாக்கியும் மீட்கப்பட்டதோடு இராணுவச் சிப்பாய் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட இராணுவச் சிப்பாயிடம் இராணுவப் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் இராணுவச் சிப்பாயின் சொந்த ஊரான குருநாகலில் சிப்பாயின் மனைவியுடன் ஒருவர் கள்ளத் தொடர்பில் இருப்பதனால் அவரை சுட்டுக் கொல்லும் நோக்கில் துப்பாக்கி எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.