செனல்-4 சர்வதேச ஊடகம் வெளியிட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான காணொளி இலங்கையில் மட்டுமல்லாமல் சர்வதேச நாடுகளிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த சூழலில் உயிர்த்தஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகள் தண்டிக்கப்படவேண்டும் என்று போர்க்கொடி காட்டியும், சீயோன் தேவாலயத்தில் வெடிகுண்டு தாக்குதல் மேற்கொண்ட காத்தான்குடி சூத்திரதாரி அசாத்தின் தலைப்பகுதியை மட்டக்களப்பு பொதுமயானத்தில் புதைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும் போராட்டம் செய்த மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் தற்போது அமைதியையை கையாண்டு வருகிறார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான முக்கிய காரணம் இவர்கள் தான் என மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன்(பிள்ளையான்) மற்றும் கோட்டாபய என ராஜபக்ஷர்களை கையை காட்டியிருக்கிறது சேனல்-04 சர்வதேச ஊடகம்.
மொட்டு மீண்டும் மலர வேண்டுமென கோட்டா பிள்ளையானை பயன்படுத்தியதாகவும் அதற்கு நானும் உடந்தையாக செயற்பட்டேன் என பிள்ளையானின் முன்னாள் ஊடக பேச்சாளர் மற்றும் வலது கையாக திகழ்ந்த அசாத் மெளலான வாக்குமூலம் அளித்திருந்தார்.
இது குறித்து முன்னாள் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவிக்கையில் “அழிக்கப்பட்ட இனத்தின் பிரதிநிதியாக வந்துள்ளேன் என்று இராஜாங்க அமைச்சர் ஒருவர் கூறியிருந்தார் தற்போது தேவாலயங்கள் அழிக்கப்பட்டுள்ளன, கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள் ஆதாரங்களும் வெளிக்கியிருக்கின்றது ஆனால் கிறிஸ்த்தவ தேவாலயத்தை பற்றியோ அந்த மக்களை பற்றியோ எதுவும் பேசாமல் இருக்கின்றார்” என மட்டு ஊடக அமையத்தில் இன்று(08) கூறியிருந்தார்.
அபிவிருத்தி குழு கூட்டத்தில் அமைதி காக்கிறார் சரி ஆனால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தியது யார் என்று ஆதாரங்கள் வெளியாகியிருந்தும் பாராளுமன்றத்தில் கூட சுட்டிக்காட்டாமல் பொதுவான விமர்சனங்களை வெளியிடுவது பயமா, குறுகிய அரசியல் நோக்கங்களுக்காகவா அல்லது ராஜபக்ஸர்கள் மீதான விசுவாசத்தை காட்டுவதற்காகவா அல்லது இதை அரசியல் சாணக்கியத்தனம் என்று நினைக்கின்றாரா? என்ற கேள்விகள் தொக்கி நிற்கின்றது!