அதிமுக-பாஜக இடையே கூட்டணி முறிந்துவிட்டதாக அதிமுக அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்துள்ளது. இதன்படி தமிழநாட்டின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக -பாஜக கூட்டணியை விட்டு வெளியேறி உள்ளது. அதிமுகவை போல் இதுவரை எத்தனை கட்சிகள் பாஜகவை புறக்கணித்து வெளியேறி உள்ளன என்பதை பார்ப்போம்.
அண்ணா குறித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் விமர்சனத்திற்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அண்ணாமலையின் பேச்சுக்கு சிவி சண்முகம், செல்லூர் ராஜு, ஜெயக்குமார், வேலுமணி உள்பட அதிமுகவின் பல்வேறு தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதற்கு பதிலடி கொடுத்த அண்ணாமலை, முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், செல்லூர் ராஜூவை கடுமையாக விமர்சித்தார். இது ஒருபுறம் எனில் கூட்டணி இல்லைஎன்று அறிவித்த ஜெயக்குமாரை மிகவும் தரக்குறைவான முறையில் சில பாஜக நிர்வாகிகள் விமர்சித்தனர்.
அண்மையில் பேட்டி அளித்த அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வர் என்று நான் எப்படி சொல்ல முடியும் என்று பேசியதை அதிமுகவினரை கடும் கோபம் அடையவைத்தது. இதை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியை அண்ணாமலை விமர்சித்து வந்ததால், டெல்லிசென்ற அதிமுக நிர்வாகிகள், பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவை சென்று சந்தித்து புகார் அளித்தனர். ஆனாலும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
இந்நிலையில் அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுவது என அதிகாரப்பூர்வமாக முடிவு எடுக்கப்பட்டது. இது தொடர்பாக அதிமுக சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக கூட்டணியை முறித்துக் கொண்டிருப்பது பாஜகவிற்கு பாதகமாக பார்க்கப்படுகிறது
இதனிடையே பாஜக தனது கூட்டணி கட்சிகளை பல மாநிலங்களில் இழந்துள்ளது. இதில் முக்கியமான கூட்டணி என்றால் அதிமுக கூட்டணி தான்..அதிமுகதான் பாஜகவின் மிகப்பெரிய கூட்டணி கட்சி. அந்த கட்சியை இப்போது பாஜக கூட்டணியில் இழந்துள்ளது. இதற்கு முன்னதாக குமரசாமியின் ஜேடிஎஸ் கட்சியுடனான கூட்டணியை கர்நாடகாவில் இழந்தது. அந்த கட்சியுடன் கூட்டணி அமைத்து தான் பாஜக கர்நாடகாவில் வளர்ந்தது. ஒருகட்டத்தில் அசுர வளர்ச்சிக்கு பின்னர் மதசார்ப்பற்ற ஜனதா தளத்தை கைவிட்டது (பல வருடத்திற்கு பிறகு இப்போது மீண்டும் கூட்டணி வைத்துள்ளது).
இதேபோல் பீகாரில் நீண்ட நாட்கள் தன்னுடன் கூட்டணியில் இருந்த நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி கூட்டணியை இழந்தது.அங்கும் பாஜக அசுர வளர்ச்சி அடைந்த நிலையில், அதிர்ச்சி அடைந்த நிதீஷ்குமார், தேர்தலுக்கு பின்னர் ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் கூட்டணியில் இணைந்தார்.
மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியுடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்று வந்த பாஜக, ஒரு கட்டத்தில் முதல்வர் பதவி வேண்டும் என்று நிலைப்பாட்டை எடுத்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிவசேனா, பாஜகவை கழட்டிவிட்டு காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைத்தது. கிட்டத்தட்ட இரண்டு வருடம் ஆட்சி தொடர்ந்த நிலையில், சிவசேனா இரண்டாக உடைந்த பின்னரே மீண்டும் மகாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சியில் அமர்ந்துள்ளது.
ஏற்கனவே உத்தரப்பிரதேசத்தில் மாயாவதியின் பகுஜன் சமாஜ், மேற்கு வங்காளத்தில் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் ஒரு காலத்தில் கூட்டணியில் இருந்தது. அந்த மாநிலங்களில் வளர்ந்த பின்னர் கூட்டணி முறிந்தது. இதேபோல் ஆந்திராவில் சந்திபாபு நாயுடுவின் தெலுங்கு தேசத்துடன் ஒரு காலத்தில் கூட்டணியில் இருந்தது. ஆனால் அங்கும் முறிந்துவிட்டது. மேகலயாவில் என்பிபி கட்சியுடன் கூட்டணியை முறித்துவிட்டு தான் கடந்த சட்டசபை தேர்தலில் அங்கு போட்டியிட்டது. ஆனால் தேர்தலுக்கு பின் சேர்ந்து கொண்டது.
காஷ்மீரில் மக்கள்ஜனநாயக கட்சியுடன் கூட்டணியை பாஜக முறித்துக் கொண்டது. இப்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்த பெரிய கட்சியும் இல்லை. மேகலயாவில் என்பிபி, புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ், உத்தரப்பிரதேசத்தில் ஏடி(எஸ்), அஸ்ஸாமில் ஏஜிபி, பீகாரில் ஹெச்ஏஎம் உள்பட சுமார் 37 கட்சிகள் கூட்டணியில் உள்ளன. எல்லாமே சரிய கட்சிகள் தான்.இதில் சிவசேனா (பிளவுபட்ட) மட்டுமே சற்று பெரிய கட்சி. பாஜக அதிமுக கூட்டணியும் முறிந்துள்ளதால், தென் மாநிலத்தில் பாஜக இந்த முறை கடும் சவாலை சந்திக்கும் என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்.இதேபோல் பாஜக கூட்டணி உத்தரப்பிரதேசத்திலும், பீகாரிலும் சவாலை சந்திக்க வாய்ப்பு உள்ளதாக சொல்கிறார்கள்.