சீனாவைப் போன்று சமூக வலைத்தள பாவனையை முற்றாக தடை செய்ய வேண்டும் என்பது எமது இலக்கல்ல. போலி தகவல்கள் மற்றும் செய்திகளை பரப்புவதன் ஊடாக இன, மத மோதல்களையும் வன்முறைகளையும் தூண்டும் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்காகும் என்று அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
நிகழ்நிலை காப்பு சட்ட மூலத்தின் ஊடாக சமூக வலைத்தள ஊடகங்களை முடக்க எதிர்பார்க்கவில்லை. போலி தகவல்கள் அல்லது செய்திகள் பகிரப்படுதல், ஏனைய குற்றச்செயல்களை தடுப்பதற்காகவே இந்த சட்ட மூலம் அறிமுகப்படுத்தப்படுகிறது.
அபிவிருத்தியடைந்த சீனா போன்ற நாடுகளில் எவ்வித சமூக வலைத்தளங்களும் பாவிக்கப்படுவதில்லை. அவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறானதொரு தடையை விதிப்பதற்கு இலங்கை அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை.
இன, மத ரீதியான மோதல்களையும் வன்முறைகளையும் தூண்டக் கூடிய, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் செயற்பாடுகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட வேண்டும் என்பதற்காகவே இந்த சட்ட மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.