மட்டக்களப்பில் நேற்று 08 இடம்பெற்ற பண்ணையாளர்களின் போராட்டத்தில் பொலிஸார், பெண்கள் மீது மோசமான முறையில் நடந்து கொண்ட விதம் தொடர்பாகவும்,சர்வதேச விசாரணை ஊடாக பாதிக்கப்பட்ட மக்கள் தீர்வினைப் பெற்றுக்கொள்வதற்கு சர்வதேசம் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக்கழக கலை மற்றும் கலாச்சார மாணவர் சங்கத்தினரால் அறிக்கை ஒன்று நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
மட்டக்களப்பு செங்கல்லடியில் இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில், இலங்கை காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட வன்செயலை கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றயத்தினராகிய நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். மட்டக்களப்பு மாவட்ட பண்ணையாளர்களின் கால்நடைகளுக்கான, மேச்சல் தரையாக ஒதுக்கப்பட்ட மயிலந்தனை மற்றும் மாதவனை பகுதிகளில் சிங்கள விவசாயிகள், இலங்கை சிங்கள பௌத்த அரச மற்றும் அதிகாரிகளின் ஆதரவுடன் ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
பலவருடங்களாக வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை கூறாது, குற்றவாளிகளை பாதுகாத்தும் பாதிக்கப்பட்டவர்களின் உறவுகளை அச்சுறுத்தியும் வருவதுடன் சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க முடியாது எனவும் சிங்கள இனவாத அரசு கூறி வருகிறது.
இன்று மட்டக்களப்பு – செங்கலடி மத்திய கல்லூரிக்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க வருகைத் தருவதனை முன்னிட்டு இவர்கள் அதிபர் பயணிக்கும் வீதியில் ஒன்று திரண்டு அமைதியான வழியில் கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தியபோது இலங்கை காவல்த்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டதுடன் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மட்டக்களப்பு, வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவி அ. அமலநாயகி உட்பட பெண்கள் உட்பட கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பண்ணையாளர்கள், சமூகசெயற்பாட்டாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் ஆண் மற்றும் பெண் பொலிசாரால் முறையற்ற விதத்தில் தாக்கப்பட்டதுடன்; அவமானப்படுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு தாக்கப்பட்டவர்களில் பல பெண்கள் மயக்கமடைந்ததுடன், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க மட்டக்களப்பு மாவட்ட தலைவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையில் இனத்துவ மற்றும் மத ரீதியில் சட்டம் வளைக்கப்படுவதையும், மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வுவழங்காமல் ஏமாற்றுவதையும் சட்ட விரோத குடியேற்றங்களுக்கு ஆதரவு வழங்குவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது.அதேவேளை அமைதி வழியில்போராடுபவர்களின் உரிமைக்குரலை வன்முறை மூலம் அடக்க நினைக்கும் அரச பயங்கரவாதத்தையும் கண்டிக்காமல் மௌனமாக இருக்கமுடியாது.
அந்த வகையில் நாட்டில் சட்டம் இயற்றுபவர்களாளும் சட்டத்தை பாதுகாப்பவர்களாளும் ‘சட்டம்’ மீறப்படுவதனையும் மக்கள் மீது வன்முறைகட்ட விழ்த்துவிடப்படுவதனையும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றயத்தினராகிய நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி உள்நாட்டில் கிடைக்க முடியாத நிலையில், சர்வதேச விசாரணை ஊடாக பாதிக்கப்பட்ட மக்கள் தீர்வினைப் பெற்றுக்கொள்வதற்கு சர்வதேசம் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.