கடந்த 3 வருடங்களில் பல்கலைக்கழகங்களில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களைத் தடுப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அடுத்த மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர் இது தொடர்பான அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டு மாணவர்களால் துன்புறுத்தப்பட்ட போது, ஏற்பட்ட சேதத்திற்கு நட்டஈடு கோரி ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணை செய்தபோதே உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதன்படி புவனேக அலுவிஹாரே, ஷிரான் குணரத்ன மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்தநிலையில் கொழும்பு, களனி மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகங்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் நீதிமன்றில் தமது சாட்சியங்களை முன்வைத்ததுடன், குறித்த விடயம் தொடர்பான அறிக்கைகளை தாக்கல் செய்வதற்கு கால அவகாசம் வழங்குமாறும் கோரியிருந்ததாக நீதிமன்றத்துக்கான எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.