முல்லைத்தீவு மாவட்ட முன்னாள் நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் அல்லது வேறு எந்த வகையிலும் அச்சுறுத்தல் விடுக்கப்படவில்லையெனவும் , அவரது திடீர் வெளிநாடுப் பயணமானது முன்கூட்டியே திட்டமிடப்பட்டது எனவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) டிஜிட்டல் தடயவியல் பிரிவு அரசாங்கத்திடம் சமர்ப்பித்த அறிக்கையின்படி இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 25ஆம் தேதி இந்தியா செல்வதற்கு நீதிபதி விடுப்பு கோரி விண்ணப்பித்தபோது, அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, செப்டம்பர் 24ஆம் தேதி அவர் திடீரென வேறு நாட்டிற்குப் புறப்பட்டுச் சென்றுவிட்டார் என்று அந்த அறிக்கை கூறுகிறது.
குறித்த சம்பவத்தின் பின்னணியில் ஒழுங்கமைக்கப்பட்ட ஏதேனும் குழுக்களின் செல்வாக்கு இருக்கிறதா என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
உயிரச்சுறுத்தல் காரணமாக நீதிபதி சரவணராஜா பதவியை இராஜினாமா செய்தது தொடர்பில் முழுமையான விசாரணை நடாத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவுறுத்தியுள்ளார்.
நீதிபதி சரவணராஜா தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டமை தொடர்பில் நீதித்துறை சேவைகள் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடுகள் எதையும் பதிவு செய்யவில்லை. மேலும் செப்டெம்பர் 23 ஆம் திகதி தனது இராஜினாமா கடிதத்தை நீதித்துறை சேவைகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைத்ததுடன் செப்பெடம்பர் 24ஆம் திகதி அவர் வெளிநாட்டிற்கு சென்றுள்ளார்.
அத்துடன் குறித்த நீதிபதி பிரதிவாதியாக பதிவு செய்யப்பட்ட வழக்கு ஒன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நிலுவையிலிருந்துள்ளது.
நீதிபதி சரவணராஜாவின் மனைவி, முல்லைத்தீவு மேலதிக நீதிபதி டி. பிரதீபன், முல்லைத்தீவு சிரேஷ்ட அத்தியட்சகர் டி.யூ.பீ. அமரதுங்க, பொலிஸ் தலைமையக பதில் ஆய்வாளர் W.G.H.N.K. திலகரட்ன, நீதிபதியின் தனிப்பட்ட பாதுகாப்பு பொலிஸ் அதிகாரி கொன்ஸ்டபிள் கே.எஸ். பிரேமன், தனிப்பட்ட பாதுகாப்பு கொன்ஸ்டபிள் கே. சிவகாந்தன், முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தின் பொலிஸ் கொன்ஸ்டபிள் எம். முதிசன், முல்லைத்தீவு பொலிஸ் கொன்ஸ்டபிள் ஆகிய சமரகோன் மற்றும் சந்தருவன், முல்லைத்தீவு நீதிமன்ற பதிவாளர் பீ. சரவணராஜா, நீதிபதியின் அலுவலக எழுத்தர் (Clerk) பீ. சுசிகன், பிஸ்கல் எஸ். சிவக்குமார் மற்றும் முல்லைத்தீவு நீதிமன்ற உத்தியோகத்தர் ஜே. லின்டன் ராஜா ஆகியோரிடம் சம்பவம் தொடர்பில் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இருப்பினும் நீதிபதி சரவணராஜா தனக்கு எதிராக அச்சுறுத்தல்கள் இருப்பதாக ஒருபோதும் குறிப்பிட்டதில்லை எனத் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவின் முன்னாள் மாவட்ட நீதிபதி சரவணராஜா 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி முல்லைத்தீவு நீதவானாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், முல்லைத்தீவு பொலிஸ் நிலையம் அவருக்குத் தேவையான சகல பாதுகாப்பையும் வழங்கியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்த நேரத்திலும் பாதுகாப்பு அல்லது உயிருக்கு ஆபத்தான பிரச்சினை எதுவும் எழுப்பப்படவில்லை. விசாரணையில், நீதிபதி செப்டம்பர் 24-ம் திகதி துபாய்க்கு சென்றது தெரியவந்துள்ளது.
அதற்காக குருநாகல் விற்பனைப் பிரதிநிதி ஒருவரிடமிருந்து எயார் அரேபியா விமானப் பயணச்சீட்டுகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதுடன் அது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் அமெரிக்க தொலைபேசி இலக்கத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கொடுக்கப்பட்ட தொலைபேசி எண் செயல்படவில்லை என்றால் மீண்டும் அழைக்க பயணச்சீட்டு விற்பனை முகவருக்கு வேறு தொலைபேசி இலக்கம் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது.
கல்முனைப் பகுதியில் இருந்து விமானப் பயணச்சீட்டுக்கான பணம் செலுத்தப்பட்டுள்ளது. ஷார்ஜா, நைரோபி, டெல்லி வழியாக ஒக்டோபர் 12ம் திகதி இலங்கை திரும்புவதற்கு பயணச்சீட்டு பெறப்பட்டது. விமான நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட தகவலின்படி, ஷார்ஜாவை அடுத்து நைரோபிக்கு செல்ல நீதிபதி விமான பயணச்சீட்டை பயன்படுத்தவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.