எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் 55% கடனுக்கான வட்டியை செலுத்துவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
தாமரைத் தடாக திரையரங்கில் நேற்று (01) பிற்பகல் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
தேசிய கைத்தொழில் சிறப்பு விருதுகள் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் தாமரைத் தடாக திரையரங்கில் நேற்று பிற்பகல் நடைபெற்றது.
அங்கு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க;
“.. இக்கட்டான சூழ்நிலையில் இருந்து கடனாளிகளை காப்பாற்றி முன்னேறிச் செல்வதற்காகவே இம்முறை வரவு செலவுத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. கடனை செலுத்துவதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ள போதும் கடனை செலுத்தும் சக்தி எமக்கு உள்ளதா என பார்க்கின்றோம்.
கடனை அடைக்க முடியும் என்ற நம்பிக்கையை வரவு செலவுத் திட்டத்தின் மூலம் பெற வேண்டும். அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் கடனுக்கான வட்டியை செலுத்த ஒரு பகுதி ஒதுக்கப்பட்டு, கடனுக்கான வட்டிக்கு 55% நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
2,500 பில்லியன் ரூபா கடன் வட்டியாக செலுத்தப்பட வேண்டும் மற்றும் ரூபாயின் பெறுமதியை பாதுகாத்து செலுத்த வேண்டும். ரூபாய் வீழ்ச்சியடையாது, பணத்தை அச்சிட முடியாது. வங்கியில் கடன் கூட பெற முடியாது. இதை இரு கைகளையும் கட்டிப்போட்டுவிட்டு செலுத்தத்தான் வேண்டும்.
பெறுமதி சேர் வரியை 18% ஆக உயர்த்த வேண்டியிருந்தது. வாக்கெடுப்பு ஒன்று நெருங்கும் போது இதைச் செய்வது கடினம். இல்லை என்றால் அனைவரின் எதிர்காலமும் கேள்விக் குறியாகும்…” என்றார்.