அரச வங்கியொன்றின் கணக்கிலிருந்து 2 மில்லியன் டொலர்களை பெற்றுக்கொள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரிகள் தற்போது முயற்சித்து வருவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் உட்பட ஊழல் மோசடியில் ஈடுபட்டுள்ள இலங்கை கிரிக்கெட் சபையை நீக்குதல் என்ற தலைப்பில் இலங்கை கிரிக்கெட் தொடர்பான விவாதம் தற்போது பாராளுமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது.
இதன்போது கருத்து வெளியிட்ட அமைச்சர், அந்த அதிகாரிகளில் ஒருவர் ஏற்கனவே நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக குறிப்பிட்டார்.
“சுதந்திர சதுக்கத்தில் உள்ள கணக்கில் இருந்து 2 மில்லியன் டொலர்களை எடுக்கப் போவதாக எனக்கு செய்தி வந்தது. இவர்களின் கடவுச்சீட்டை முடக்குவதற்கு என்ன நடவடிக்கை எடுக்க முடியும் என ஆராய வேண்டும். இவர்களில் ஒருவர் தற்போது நாட்டில் இல்லை. மேலும் காலத்தை தாழ்த்துவதால் பிரச்சினையே உருவாகும். குதிரை போன பிறகு லாயத்தை மூடுவதில் அர்த்தமில்லை” என்றார்.