வரலாற்றில் முதன் முறையாக இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட ஃபாரா ரூமி என்ற 31 வயதுடைய பெண் சுவிட்சர்லாந்து நாடாளுமன்றில் உறுப்பினராக தெரிவாகியுள்ளார்.
பிரான்சிஸ்கா ரொத் என்ற சமூக ஜனநாயகக் கட்சியை சேர்ந்த பெண் அரசியல்வாதி, சுவிஸ் மக்கள் கட்சியைச் சேர்ந்த கிறிஸ்டியன் இமாம் என்பவரை தோற்கடித்து வெற்றியை பதிவு செய்திருந்தார்.
பிரான்சிஸ்காவின் இந்த தேர்தல் வெற்றியானது இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட ஃபாரா ரூமிக்கு அதிர்ஷ்டத்தை கொண்டு வந்துள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் ரூமி கான்டன் பேரவை உறுப்பினராக கடமையாற்றி வருகின்ற நிலையிலேயே தேசிய நாடாளுமன்றின் உறுப்பினராக தெரிவாகியுள்ளார்.
இலங்கையில் பிறந்த ரூமி ஆறு வயதாக இருக்கும்போது 1998ஆம் ஆண்டு பெற்றோருடன் சுவிட்சர்லாந்தில் குடியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கான்டன் தேர்தலில் வெற்றி பெற்ற போது இலங்கை மக்கள் தம்மை கொண்டாடியதாகவும் தேசிய நாடாளுமன்றில் உறுப்பினராக தெரிவானமை பெரும் மகிழ்ச்சியை மக்களுக்கு ஏற்படுத்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பேண்தகு சுகாதார நலன் கட்டமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டு தாம் செயற்பட போவதாக அவர் கூறியுள்ளார்.
எதிர்வரும் டிசம்பர் மாதம் நான்காம் திகதி நாடாளுமன்ற அமர்வுகளில் ரூமி பங்கேற்பார் என தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் குறித்த பெண்ணிற்கு இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் சிறிவொல்ட் அவரது எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளதுடன் பலரும் பாராட்டி வருகின்றனர்.