சந்தேகநபரைத் துரத்திச் சென்ற பொலிஸ் அதிகாரி ஒருவர் காணாமல் போயுள்ளதாக ஜா- எல பொலிஸார் நேற்றையதினம் (23-11-2023) தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் ஆற்றில் குதித்துத் தப்பிச் செல்ல முயன்ற போது அவரை துரத்திச் சென்ற நிலையில் காணாமல் போயுள்ளார் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வாறு காணாமல் போனவர் ஜா-எல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 26 வயதுடைய சாவகச்சேரியைச் சேர்ந்தவராவார்.
இதன்போது தப்பிச் செல்ல முயன்ற சந்தேக நபர் மீண்டும் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில் குறித்த பொலிஸ் அதிகாரி காணாமல் போயுள்ளார்.
குறித்த சம்பவம் ஜா-எல பொலிஸ் நிலைய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபரை நேற்றையதினம் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்துச் செல்ல தயாராகும் போதே இடம்பெற்றுள்ளது.
ஹெரோயின் போதைப்பொருள் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்வதற்காக பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று பொலிஸ் கெப் வண்டிக்கு அழைத்து வந்துள்ளனர்.
அப்போது, சந்தேக நபர் கைவிலங்குடன் அருகில் உள்ள ஆற்றில் குதித்து தப்பி ஓட முயன்றபோது, சந்தேக நபரை கைது செய்ய மூவருடனான பொலிஸ் அதிகாரிகள் குழுவும் ஆற்றில் குதித்துள்ளனர்.
அங்கு குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், இவர் ஜா -எல பொலிஸ் நிலையத்துக்கு இடமாற்றம் பெற்று வந்து 3 1/2 வருடங்கள் ஆவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், தப்பிச் செல்ல முயன்ற சந்தேக நபர் மீண்டும் ஜா -எல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.