தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது 02 டிசம்பர் 2023 க்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து 03 டிசம்பர் 2023 க்குள் மேலும் ஒரு சூறாவளி புயலாக உருவாகும். இந்த அமைப்பு இலங்கையின் வடக்கு கடற்கரைக்கு அருகில் மேற்கு-வடமேற்கு திசையில் வட தமிழக கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் இன்று மதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய மாகாணங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் . மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் வரை ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.
வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு (40-50) கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் .
அதேவேளை, கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் அபாயகரமானதாகவும் காணப்படும். ஆகையினால் மீனவர்களும் கடல் சார் ஊழியர்களும் மறு அறிவித்தல் கிடைக்கும் வரையில் கடல் பிராந்தியங்களுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.