இலங்கையில் நிச்சயிக்கப்படும் திருமணங்கள் தொடர்பில், வெளிநாடுகளில் உள்ள தகுதிவாய்ந்த நீதிமன்றம் ஒன்றில் விவாகரத்தை பெற்றுக்கொள்வதற்கு, இலங்கையின் சட்டத்தில் எந்த தடையும் இல்லை என மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த வாரம் முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது.
இதுவரை இலங்கையில் திருமணம் செய்துகொண்டு வெளிநாடுகளுக்குச் சென்ற இலங்கையர்கள் வெளிநாட்டு நீதிமன்றங்களில் பெற்ற விவாகரத்துகள், இலங்கையில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
எனினும் நீதியரசர் சோபித ராஜகருணா, நீதியரசர் தம்மிக்க கணேபொல ஆகியோர் இந்த தீர்ப்பை வழங்கியுள்ள நிலையில், குறித்த நடைமுறையில் மாற்றம் நிகழ்ந்துள்ளது.
பிரித்தானியாவைச் சேர்ந்த மனுதாரரான லியனகே சம்பிக்க ஹரேந்திர சில்வா என்பவர் 2018 ஆம் ஆண்டு தமது மனைவியை விவாகரத்து செய்துள்ளார்.
தொடர்ந்து தனது சட்டத்தரணி ஊடாக, இலங்கையின் திருமணப் பதிவாளர் நாயகத்தின் 2021 மார்ச் மாத தீர்மானத்தை இரத்துச் செய்வதற்கான சான்றிதழொன்றை தாக்கல் செய்துள்ளார்.
எனினும் இலங்கையின் நடைமுறையில் உள்ள சட்டங்களின் கீழ் வெளிநாட்டில் பெற்ற அத்தகைய விவாகரத்தை அங்கீகரிக்க முடியவில்லை.
எனவே மனுதாரர் இலங்கையில் உள்ள தகுதி வாய்ந்த நீதிமன்றத்தில் ஆணையைப் பெற வேண்டும் என்று கூறப்பட்டது.
இதனையடுத்தே மனுதாரர், இலங்கையின் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உதவியை நாடியுள்ளார்.
இந்தநிலையிலேயே தற்போது இலங்கையர்கள் வெளிநாடுகளில் உள்ள தகுதிவாய்ந்த நீதிமன்றங்களில் விவாகரத்தை மேற்கொண்டால், அது இலங்கையில் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்ற தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.