இந்திய அரசின் நிதி பங்களிப்புடன் மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் நிர்மாணிக்கப்படவுள்ள 10 ஆயிரம் வீட்டுத் திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இன்று (15) கொழும்பு, பத்தரமுல்லவில் உள்ள நீர்வழங்கல் அமைச்சில் நடைபெற்ற சந்திப்பில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
“10 ஆயிரம் வீட்டுத்திட்டத்தின் ஆரம்பக்கட்டமாக ஆயிரத்து 300 வீடுகளை அமைப்பதற்கான பணி இன்னும் ஓரிரு வாரங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்திய அரசின் உதவியுடன் முன்னெடுக்கப்படவுள்ள 10 ஆயிரம் வீட்டு திட்டம் தொடர்பில் அனைத்து பங்குதாரர்களுடனும் கலந்துரையாடல்களும் இடம்பெற்றுள்ளது.
வீடுகளை நிர்மாணிப்பதற்கான இடங்களை அடையாளம் காணும் பணி ஏற்கனவே நிறைவுபெற்றுள்ளதால், காணி உரிமையை வழங்குவதற்கு பெருந்தோட்ட கம்பனி தரப்பிலும் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, 10 பேர்ச்சஸ் காணி உரிமையுடன் – சகல உட்கட்டமைப்பு வசதிகளையும் உள்ளடக்கிய வகையில் குறித்த வீட்டுத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வருகை தந்திருந்தபோது மலையக மக்களுக்கான 10 ஆயிரம் வீட்டுத் திட்டம் அறிவிக்கப்பட்டது, அப்போது ஒரு வீட்டுக்கு சுமார் 10 லட்சம் ரூபா மதிப்பிடப்பட்டது.
எனினும், கொரோனாத் தொற்று, பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் வீட்டுத் திட்டப் பணிகள் தாமதித்தன.
இந்நிலையில் தற்போதைய நிலைமையில் ஒரு வீட்டுக்கு சுமார் 28 லட்சம் ரூபா தேவைப்படுவதனால், இது தொடர்பில் இந்திய அரசுடன் பேச்சு நடத்தி, அதற்கான அனுமதியும் பெறப்பட்டுள்ளது.” என்றார்.