மட்டக்களப்பு தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் கடந்த மாவீரர் தினத்தன்று அஞ்சலி நிகழ்வுகளில் கலந்துகொண்டபோது கைதுசெய்யப்பட்ட நான்கு பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
23 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான 2 ஆள் வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். எதிர்வரும் ஜனவரி மாதம் உயர்தரப்பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவன் உட்பட நான்கு பேர் நேற்று (19) பிணையில் விடுக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் கடந்த 27ஆம் திகதி மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்று முடிந்த நிலையில் அங்கு ஒங்கமைப்பில் ஈடுபட்டிருந்த நிதர்சன் மற்றும் மாணவனான வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் உயர்தரம் பயிலும் நியுட்டன் தனுசாந்த் உட்பட நான்கு பேர் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
இவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வாழைச்சேனை பொலிஸாரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதியை சந்தித்த பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சாணக்கியன் ஆகியோர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டவர்களை விடுதலைசெய்யுமாறு வலியுறுத்தியிருந்தனர் அத்துடன் இவர்களது விடுதலை தொடர்பில் ஆரம்பம் முதல் இறுதி வரை மட்டக்களப்பு மாவட்ட சிவில் அமைப்புக்கள் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன் வழக்கு மீண்டும் 01.01.2023 அன்று மன்றுக்கு எடுத்துக்கொள்ள திகதி குறிப்பிடப்பட்டுள்ளது.