கால்நடை பண்ணையாளர்கள் முன்னெடுத்துவரும் போராட்டம் எதிர்வரும் சனிக்கிழமை 100 நாட்களை தொடும் நிலையில் அன்றைய தினம் பாரிய போராட்டத்திற்கு பண்ணையாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
நேற்றைய தினம் (21) சித்தாண்டியில் கால்நடை பண்ணையாளர்கள் போராட்டம் முன்னெடுத்துவரும் போராட்ட இடத்தில் ஊடகவியலாளர்கள் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து இது தொடர்பில் தெரிவித்திருந்தனர்.
தமது மேய்ச்சல் தரை மீட்பு போராட்டம் நூறு நாட்கள் அண்மித்துள்ள நிலையில் தமது கோரிக்கைக்கான நியாயமான தீர்வுகள் எதுவும் இதுவரையில் வழங்கப்படாத நிலையே காணப்படுவதாக மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் கமநல அமைப்பின் தலைவர் சீ.நிமலன் தெரிவித்தார்.
மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு பல தடவைகள் தமது கோரிக்கைகள் குறித்து கடிதம் எழுதியுள்ள நிலையிலும் இதுவரையில் ஒரு கடிதத்திற்கு கூட பதில் வழங்கப்படவில்லையெனவும் அவர்கள் கவலை தெரிவித்தனர்.
தமது கால்நடைகள் மேய்க்கும் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளதனால் தாங்கள் நடுவீதியில் நூறு நாட்களாக போராடிவரும் எமது கோரிக்கைகளுக்கு அரசியல்வாதிகளோ, அதிகாரிகளோ கவனத்தில் கொள்ளாத நிலையே இருந்து வருவதனால் எதிர்வரும் சனிக்கிழமை பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த போராட்டத்திற்கு சிவில் சமூக அமைப்புகள்,அரசியல்வாதிகள்,பொது அமைப்புகள்,விவசாய அமைப்புகள்,பல்கலைக்கழக மாணவர்கள்,மதத்தலைவர்கள் என அனைவரையும் ஆதரவு வழங்குமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.